Skip to main content

மழை....!



















மழை நின்று வெகுநேரம் ஆகிவிட்டது. இன்னும் சொட்டிக் கொண்டிருக்கிறது துளிகள் தாழ்வாரங்களிலும், செடிகளிலும், எனக்கு ஓடிப்போய் அந்த கிலுவை மரத்தை உலுக்கவேண்டும் என்ற ஆசை எழுந்த மூன்றாம் விநாடியில் கிலுவையின் கீழே போய் நின்றேவிட்டேன். பற்றிப் பிடித்து பரவசமாய் உலுக்கிய நொடியில் தேக்கி வைத்திருந்த சந்தோசத்தை கள்ளம் கபடமின்றி என் மீது பரவவிட்டு எதுவுமற்று நின்றிருந்தது கிலுவை.

சாலையின் நடுவிலும், சில இடங்களில் ஓரத்திலும் ஓடிக்கொண்டிருந்த மழை நீர் மண்ணோடு உறவாடி சில இடங்களில் குளம்பி தன்னை சகதியாக்கி வைத்திருந்தது. நான் அண்ணார்ந்து வானத்தைப் பார்த்தேன்.. வானம் குனிந்து என்னைப் பார்த்தது.

கருமையையாய் அலைந்து கொண்டிருந்த மேகங்கள் கல்யாண வேலைக்காக அங்கும் இங்கும் நகரும் ஆட்களைப் போல கூட்டம் கூட்டமாய் போய்க்கொண்டிருந்ததின் பின்னணியில் நீல நிற வானத்தை வெளியே வரவிடமாட்டோம் என்று பிடிவாதம் கொண்டிருப்பதாக எனக்குப்பட்டது. நிலையற்ற ஆசையாய் இருந்தாலும் அதைச்செய்வதிலும் ஒரு முழுமை இருப்பதாக தோன்றியது எனக்கு.

வீட்டுக்குள் அடைந்து கிடந்த சிறார் பட்டாளங்கள் புற்றிலிருந்து வரும் ஈசலைப் போல ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பி வந்தன. சேறும், சகதியும், தேங்கிய நீரும், குளுமையும், மழை நீர் தேக்கிய மரங்களும் வளர்ந்து நிற்கும் பெரியவர்களுக்கு அறிவால் தூரப்பட்டது.. ஆனால் சிறுவர்கள் எல்லாவற்றிலும் தங்களின் மகிழ்ச்சியை நிறைத்து மழையின் விளைவுகளை தங்களின் சந்தோசமாக்கிக் கொண்டிருந்தர்கள்.

பக்கத்து வீட்டு குமார் என்னிடம் வந்து செய்து தரச்சொன்ன கத்திக் கப்பல் இதோ மிதக்கத்தொடங்கிவிட்டது...கூடவே என் மனமும்......! அதோ அந்த கத்திக் கப்பல் தத்தி தத்தி... ஆடி ஆடி.. சிறுவர் கூட்டத்தின் உற்சாகத்துக்கு காசு வாங்காமல் படியளக்கிறதே எப்படி? ஓ....பொருள் கொடுத்து வாங்குவதால் வருவது உற்சாகத்தை போலத்தான் இருக்குமே அன்றி அது எப்போதும் மனக்கிலேசத்தை கொடுத்து இருக்குமா என்றால் இல்லை என்றுதான் நான் சொல்வேன்...

எதிர்த்த வீட்டு ஜோயல் அம்மா காலையில் இருந்து மழையைத் திட்டிவிட்டு.. சாக்கு விரித்து நெல்லை காயவைத்தாலும் சுட்டெரிக்கும் சூரியன் வருமா? இல்லை மீண்டும் மழை வந்து அவளின் நெல்லை காயவிடாமல் நாசம் செய்யுமா? என்ற யோசனையில் வாசலுக்கும் ஹாலுக்கும் நடந்ததோடு இல்லாமல் பக்கத்து வீட்டு அனுபவம் நிறைந்த ஆச்சியிடம்.... பத்து முறையாவது கேட்டிருப்பாள்.. மழைவருமா என்று? வராது என்று ஆச்சி சொன்னாலும் வரவேண்டிய மழை வந்துதான் தீரும். வரும் என்று சொன்னால் வரமால் போகும் மழை வராமலேயேதான் போகும் என்பது ஜோயல் அம்மாவுக்கும் தெரியாது பக்கத்து வீட்டு ஆச்சிக்கும் தெரியாது...அவர்களுக்கு பொருள் மழை இல்லை... காயவைக்க வேண்டிய நெல்....

நிரம்பிவிட்ட அண்டாவின் மழைத்தண்ணீரை உள்ளே கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டிருந்தார் மூன்று வீடு தள்ளிய சகாயராஜ்..மழைத்தண்ணீராம் சூடு செய்து குளிரவைத்து குடித்தால் நல்ல ருசியாம். அவருக்கும் கொஞ்சம் கவலைதான் இரண்டு அண்டா இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமே என்று.... நிரம்பிய ஒரு அண்டா ஏன் அவருக்கு சந்தோசம் கொடுக்கவில்லை என்று என்னை நானே கேட்டுக் கொண்ட போதுதான்

பானுமதியின் தாத்தா டீ கடைக்கு டீ குடிக்கப்போவதாய் வீட்டில் சொல்லிவிட்டு, வழுக்கி விழுந்துடாம பாத்து போய்ட்டு வாங்க என்ற பாட்டியின் கட்டளையை காதில் கவனமாய் சொருகிக்கொண்டு என்னை கடக்கையில் இன்னும் 24 மணி நேரத்துக்கு மழை விடாதாம் தம்பி என்று வார்த்தைகளை பரவிட்டுப் சென்றார்.

மழையில், அல்லது மழைக்காலத்தில் சூடான தேநீர் எப்போதும் சுகம்தான். வைரமுத்து கூட எழுதியிருபார் தனது சிகரங்களை நோக்கி என்னும் கவிதைத் தொகுப்பில்.. மழையில் கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் சிலர்...அந்த குளிரில் சூடான தேநீரை தொண்டைக்குள் செலுத்தும் போது, அந்த சுகத்தில் தவணை முறையில் சமாதி நிலையை அடைந்தார்கள் என்று...

நிம்மதியும் சந்தோசமும் எப்படி ஒரு செயலை வாங்கிக் கொள்கிறோம் அல்லது ஆழ்ந்து அனுபவிக்கிறோம் அதில்தான் இருக்கிறது. பெரிய பெரிய விலைகள் கொடுத்து செய்யும் செயல்களில் நிச்சயாமாய் இல்லை சந்தோசங்கள்.. ஆனால் சின்ன சின்ன நிகழ்வுகளில் அது ஒளிந்து கொண்டிருக்கிறது ஆனால் நாம்தான் அவற்றை தேடிக் கண்டு பிடிப்பதேயில்லை....

நான் யோசித்துக் கொண்டே இருக்கும் போது என்னைக் கடந்த வாகனம் என்மீது சாலை நீரை வாரி இறைத்துவிட்டு சென்றது...! மனம் கோபப்பட்டது...யார் இவன் ஆள் நிற்பது தெரியாமல் இப்படி போறானே என்று...!சட்டென்று சுதாரித்து..

அட.. என் கோப வார்த்தையிலேயே இதற்கு பதில் ஒளிந்திருக்கிறதே......

ஆள் நிற்பது தெரியவில்லை அதனால்தான் அப்படி சென்றுவிட்டார். வேண்டுமென்று என் மீது நீரை வாரி இறைக்க அவருக்கு என்ன என் மீது கோபம்? என்று யோசித்த நொடியில் அந்த வண்டி ஓட்டிச் சென்றவர் மீது பாசமும், அன்பும் வந்து சாரி அண்ணா ....என்று மனதுக்குள் சொல்ல வைத்தது இல்லை இப்போது விசயம்...அதோ அந்த கிணற்று மீது நிற்கும் ஒற்றைக் காகத்தைப் பாருங்கள்.....

மழையில் நன்றாக நனைந்து சிறகெல்லாம் ஒட்டிப் போய்...ஈனஸ்வரத்தில் கத்திக் கொண்டு.. ஒடுங்கி நிற்கிறது.....! என்னை மீறி எட்டிபார்த்த கண்ணீர்த்துளியில் அறியாமை இருந்தது நன்றாகத்தெரிந்தும் வாய்விட்டே கேட்டுவிட்டேன்...." உனக்கு குளிருதா காக்கா ? ' என்று.....

மழைக்காலங்களில் பறவைகளுக்கு சிரமம்தான்..இரை தேடிப் பறக்க முடியாது. ஏதோ ஒரு மரத்துக்குள் அல்லது கூட்டுக்குள் தம்மை உள்ளேயே இருத்திக் கொள்ள வேண்டும். மனிதனைப் போல திட்டமிட்டு சேர்த்தா வைத்திருக்கிறது பறவைகளும் விலங்குகளும்.....? மழை முடியும் வரை பசியோடுதானிருக்கும்.....எப்படி இருந்தாலும் அவை இயற்கையோடு ஒத்துதான் போகும்...முரண் கொள்ள மனிதனைப் போல மனமா இருக்கிறது அவைகளுக்கு.....?

சைக்கிளில் போன யாரோ வழுக்கி விழுந்து விட கை கொட்டி சிரித்த சிறார்கள் கூட்டத்தின் சப்தம் என்னை வெளியே இழுத்துப் போட்டது....விழுந்தவரும்ம் சிரித்துக் கொண்டே....சைக்கிளை எடுத்துக் கொண்டு ' வழுக்கி விட்டிருச்சு 'என்று சொல்லிக்கொண்டே நகர்ந்து விட்டார்.

வெகு நேரமாய் தெருவோரமாய் நின்று கொண்டிருந்த என்னை ஜன்னலின் வழியே இருந்து எட்டிப்பார்த்த இரு கண்களுக்குச் சொந்தக்காரிதான் ' கயல்.....'!

'ஏய் லூசு மழை நேரத்துல என்ன பண்ற ரோட்ல ? ' கேலியோடு சேர்ந்து அவள் காதலையும் பலதடவை எனக்கு அனுப்பியிருக்கிறாள்....! எனக்குத்தான் அவளை மட்டும் காதலிக்கும் ஒரு பக்குவம் இல்லாமல்..செடி, கொடி, மலை, மண், இசை, என்று திணைகள் தாண்டி விரிந்து பரந்து கிடந்தது காதல்...!

மீண்டும் வானம் இருட்டத் தொடங்கியிருந்தது...! சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கு துக்கம், சிலருக்கு எரிச்சல், சிலருக்கு காதல் என்று தோன்றின எல்லாம் அவரவர் மனதில் இருந்து தோன்றினாலும் மழை என்னவோ....எதிலும் பந்தப்படாமல்தான் இருந்தது.....

மங்கிய வெளிச்சமும்...சிலாகிக்க வைக்கும் குளிரும்....எனக்கு இனிமையாகத்தான் இருந்தது.......

இல்லாமல் இருந்து கொண்டு..
சொல்லாமல் கொள்ளாமல்
தன்னை இழக்கும்..தண்ணீர் மேகங்கள்...
எப்போதும் எதைத்தான்
எதிர்பார்த்திருக்கின்றன மனிதர்களிடமிருந்து?

மனம் ஒரு கவிதையை எழுதி முடித்து இருந்த அதே நேரம் அனிசையாய் வேண்டத் தொடங்கியிருந்தது....ஏக்கத்தோடு....

' மீண்டும் வா மழையே...'


அப்போ வர்ர்ர்ர்ட்ட்ட்டா....!


தேவா. S

Comments

// வராது என்று ஆச்சி சொன்னாலும் வரவேண்டிய மழை வந்துதான் தீரும். வரும் என்று சொன்னால் வரமால் போகும் மழை வராமலேயேதான் போகும் //

ரொம்பத் தடவை, வானிலை தகவல் மையம் தரும் தகவல் கூட இந்த வகையாத்தான் இருந்திருக்கு..
இவர் பதிவை இந்த மழை படித்தால் மீண்டும் இங்கே வந்து விடும் போல இதோ எங்க அம்மா, அண்ணன் கிட்ட சொல்றேன் இவர் மழை வரவேண்டும் சொல்றார்...தேவாவிற்கு நல்லா திட்டு விழும் ...
அப்படியே மழையில் ஊர் சுற்றியது போல ஒரு உணர்வு....கத்திக் கப்பல் விட்ட நினைவு எல்லாம் வருகிறது எங்க தாத்தா கப்பல் செய்து தருவார் அதை நாங்கள் மழை நீரில் விட்டு விளையாடுவோம்....
கவிதைத்தனமான கதையின் முடியில்

//இல்லாமல் இருந்து கொண்டு..
சொல்லாமல் கொள்ளாமல்
தன்னை இழக்கும்..தண்ணீர் மேகங்கள்...
எப்போதும் எதைத்தான்
எதிர்பார்த்திருக்கின்றன மனிதர்களிடமிருந்து?//
கவிதை அழகாய் இருக்கிறது.
மழையை வரச் சொல்லும் நீங்கள் கயலின் பார்வைக்கும் ஓகே சொல்லாமே...
Kousalya Raj said…
//என் கோப வார்த்தையிலேயே இதற்கு பதில் ஒளிந்திருக்கிறதே//

நாம் கோபத்தில் வெளிபடுத்தும் வார்த்தைகளை சற்று நிதானித்து பார்த்தால் அதில் எவ்வளவு அபத்தம் இருக்கிறது என்று புரியும்...!

நமக்கு அப்போதைக்கு நம் கோபம் தான் பெரிதாக தோன்றுமே தவிர நிதானித்து பார்க்க கூட பக்குவம் இருப்பதில்லை...அந்த பக்குவம் இருப்பவர்கள் வாழ்கிறார்கள் இல்லாதவர்கள் வீழ்கிறார்கள்...

//தண்ணீர் மேகங்கள்...
எப்போதும் எதைத்தான்
எதிர்பார்த்திருக்கின்றன மனிதர்களிடமிருந்து?//

அது இயற்கை... நாம் மனிதர்கள் !!?

//செடி, கொடி, மலை, மண், இசை, என்று திணைகள் தாண்டி விரிந்து பரந்து கிடந்தது காதல்.//

இயற்கையை காதலிக்கும் மனம் ஈரமாய் தான் இருக்கும்...

மீண்டும் மழை வந்து உங்கள் வேண்டுதல் நிறைவேற்றும்.

மிக ரசித்தேன் ! நன்றி !
சின்ன வயசில மழையில் விளையாடிய ஞாபகங்கல் வருது!
மிகவும் ரசித்து ருசித்து படித்தேன் அண்ணா வரிகளை...

நினைவுகள் கடல் தாண்டி பலமையில்களுக்கு அப்பால் உள்ள ஊரில் பின்னோக்கி பால்யனாக பயணித்தேன் திரும்பவும் படிப்பேன் திரும்பத்திரும்ப படிப்பேன் உங்கள் உள்ளம் வாழும் வரிகளில் ஊர்ந்து செல்கிறது என் மனதும் அண்ணா
//வெகு நேரமாய் தெருவோரமாய் நின்று கொண்டிருந்த என்னை ஜன்னலின் வழியே இருந்து எட்டிப்பார்த்த இரு கண்களுக்குச் சொந்தக்காரிதான் ' கயல்.....'!///


நல்லா இருக்கு மக்கா...........
ஆர்வா said…
மிக அருமையான எழுத்துத்திறன் உங்களுக்கு இருக்கிறது. நனைந்தேன்
மனம் போல மழையில் நனைந்து..
கவிதை எல்லாம் சொன்னிங்க..

உங்களோட.. நனைந்த அனுபவம் கிடைச்சது சரி..

நனைந்ததுக்கு, வீட்டில் ஒன்னும் சன்மானம் கிடைக்கலியா? :)

உங்களோட சேர்ந்து, நனைஞ்சதுக்கு எங்களுக்கும் சேர்த்து விழ போகுது..!!

(அப்புறம் அந்த டீ மேட்டர், இந்த பதிவிலும்.... :D :D )

வந்ததே வந்தேன்.. ஒரு டீ குடுங்க.. சூடா..!
மழை பெய்ய ஆரம்பித்த நொடியில் இருந்து...
வானத்தை அண்ணாந்து பார்த்து.....
வானம் உங்களை குனிந்தே பார்த்து....

ஹ்ம்ம்.. நல்ல ரசனை உங்களுக்கு..!

புற்றிலிருந்து வரும் ஈசலைப் போல்...சிறார்கள்.... :-))
என்ன ஒரு உவமை.....!!! அழகு..

கத்திக் கப்பல்.. எல்லாம் செய்ய மறந்து விட்டது இப்போ... :D
மழை நேர மண் வாசனையும்....
அதில் ஓட விட்டு ரசிக்கும்....
காகிதக் கப்பல்களும்.... அழகுங்க..!

// நிரம்பிய ஒரு அண்டா ஏன் அவருக்கு சந்தோசம் கொடுக்கவில்லை என்று என்னை நானே கேட்டுக் கொண்ட போதுதான்///

....ஹ்ம்ம் நல்ல கேள்வி தான்.. என்னிக்கு இருப்பதை வச்சி திருப்தி அடையறாங்க..யாரும்???

//அந்த குளிரில் சூடான தேநீரை தொண்டைக்குள் செலுத்தும் போது, அந்த சுகத்தில் தவணை முறையில் சமாதி நிலையை அடைந்தார்கள் என்று...///

.....சின்ன சின்ன சந்தோசங்கள்... கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைப்பதில்லை.. :)

///என்று யோசித்த நொடியில் அந்த வண்டி ஓட்டிச் சென்றவர் மீது பாசமும், அன்பும் வந்து சாரி அண்ணா ....என்று மனதுக்குள் சொல்ல வைத்தது இல்லை இப்போது விசயம்..///

... ஓ.. அது இல்லியா விஷயம்... சரி விடுங்க.. நீங்களே சொல்லிடிங்க.. :D
Harini Resh said…
//இல்லாமல் இருந்து கொண்டு..
சொல்லாமல் கொள்ளாமல்
தன்னை இழக்கும்..தண்ணீர் மேகங்கள்...
எப்போதும் எதைத்தான்
எதிர்பார்த்திருக்கின்றன மனிதர்களிடமிருந்து?//

அருமை நண்பரே
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
Chitra said…
Congratulations, Dheva! Keep Rocking!
சிவகங்கை மாவட்டம் முழுக்க நல்ல மழையோ, மகன்ஸ்?

எங்க தெருவுலயும் நல்ல மழைப்பு! :-)

nice!
கேலியோடு சேர்ந்து அவள் காதலையும் பலதடவை எனக்கு அனுப்பியிருக்கிறாள்....!///


போன பதிவுக்கும் இந்த பதிவுக்கு ஏதாவது தொர்பிருக்கா தேவா சார் ???? ஹி.ஹி.ஹி............சும்மா ஒரு ஜெனரல் நாலேசுக்கு கேட்டேன்
திடீரென்று மழை தூர ஆரம்பித்ததும், வெளியே கொடியில் உலர்த்தப்பட்டிருக்கும் துவைத்த துணிகளைப் பற்றிய நியாபகம் வரும் அம்மாவிற்கு. ஓடு...ஓடு என்று பதட்டமாய் விரட்ட, ஓடிப்போய் துணிகளை அள்ளிவந்து வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கும்போது பாதி நனைந்திருப்பேன். உடல் குளிரில் வெடவெடக்கும். உள்ளம் களிப்பில் படபடக்கும்..இன்னும் நனையச் சொல்லித் தூண்டும் மனதை அடக்கிவிட்டு, சுதந்திரமாக மழையில் நனையும் அத்தனையையும் கண்டு களித்துக் கொண்டிருக்கும் மனது.

எதிர்பாராமல் சடசடவென்று பெய்த உங்கள் கட்டுரை மழையிலும் நனைந்தே போய்விட்டேன். அற்புதமான ரசனை! அருமையான படம்! தொடருங்கள் தேவா சார்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த