Skip to main content

அரசு ...!


















நான் உன்னிடத்தில் இல்லை...
நான் உனக்கானவனும் இல்லை...
காற்றை யார் கட்டுப்படுத்த...
கடலை யார் அள்ளிக் குடிக்க....
திக்கெட்டும் அலையும் தீயை
குடிசைக்குள் அடைக்க முடியுமா?
வேங்கைகள் எப்போதும் சமாதானம் பேசுவதில்லை
போராளிகள் காதலென்ற போர்வையை
எப்பொதும் போர்த்துவதில்லை..!

எழுதி முடித்து விட்டு மொட்டை மாடிக்கு வந்தேன். மாலை நேரம் எப்போதும் ரம்யமானது. மொத்த பகலின் சூட்டையும் வாங்கிக் குடித்து விட்டுக் குளுமையான இரவினைப் பகிரப் போகும் பூமி சந்தோஷித்துப் புன்னகைக்கும் ஒரு அற்புதமான நேரம். நான் ஒரு கவிஞனாகவும், எழுத்தாளனாகவும், என்னை எப்போதும் நினைத்துக் கொள்வதே இல்லை. தோன்றும் போது எழுதும் எழுத்துக்களுக்கும், பகிரும் செய்திகளுக்கும் எனக்கும் எப்போதும் தொடர்புகள் இருப்பதாக நான் நினைப்பதே இல்லை.

என்னுள் எழுவது எப்போதும் மனிதர்கள் இருக்கும் போதும், இரைச்சல்கள் மத்தியிலுமா வருகிறது? அல்ல..அல்ல அது எப்போதும் வெறுமையில் இருந்துதான் வருகிறது. அப்படிப்பட்ட வெறுமையான தருணங்களுக்காக நான் அல்லாடிப் போகும் அளவிற்கு என்னைச் சுற்றி கூட்டம் சேர்ந்து போய்விட்டதால் என் படைப்புகளுக்குத் தேவையான வெற்றிடத்தின் அடர்த்தி குறைந்துதான் போனது. வாழ்வில் எல்லாவற்றையும் விட ஒரு படைப்பாளிக்கு மிக அவசியமானது தனிமையும், அமைதியும்.....

ஏனெனில் அவனிடம் இருந்து கிளைக்கும் எண்ணங்கள் எங்கிருந்தோ உருவப்படுவதும் அல்ல கடன் வாங்கிக் கடன் கொடுக்கப்படுவதும் அல்ல....! நான் படைப்பாளியா? என்று எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு எப்போதும் புறத்தின் தாக்கங்கள் பற்றிக் கவலையில்லை. உலகியல் நாடகங்களின் சூட்சுமமும் அதன் ஆதி முடிச்சும், ஏன் இப்படி நிகழ்கிறது என்பதற்கும் என்னிடம் பெரும்பாலும் விடைகள் இருப்பதால் என்னை எவையும் ஆச்சர்யப்படுத்துவதும் இல்லை. நான் ஆச்சர்யப்படுவதும் இல்லை.

சரி அதை விடுங்கள் எதற்கு மேலே அப்படி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்? என்றுதானே கேட்கிறீர்கள். உங்களின் கேள்வியில் நியாயம் இருக்கிறது. சமீபத்தில் செதுக்கி எறிந்த ஒரு நிகழ்வின் வெளிப்பாடுதான் அது...

அரசு என்கிற தமிழரசு அதுதான் என் பெயர். இதை ஒரு நாளைக்கு இந்தப் பெயரை 300 தடவை சொல்லி அழைத்த ஒருத்தி அப்படி அழைப்பதன் பின்புலத்தில் என் மீதான அதீதக் காதல் இருப்பதாகச் சொன்னாள். காதல் என்ற வார்த்தையின் மூலம் என்னவென்று நானறிவேன் அது அவ்வப்போது மனிதர்களிடமிருந்தும் வெளிப்படுவதும் என்பதையும் அறிவேன்.

சலனமற்ற குளத்தில்
எறியப்பட்ட கல்லாய்...
என்னைக் கலைத்துப்
போட்டது ஒரு காதல்....!

முதல் நாள் என்னைச் சந்தித்தவள் என்னை ஒரு விழா மேடையில் வைத்துப் பார்த்ததாகச் சொன்னாள். எக்மோர் ரயில்வே ஸ்டேசனுக்கு எதிரே இருந்த ரெஸ்டராண்டில் ஒரு காபி குடித்து விட்டு என் ஸ்கூட்டரை எடுக்க நான் வந்து கொண்டிருந்த போது என்னை இடை மறித்தவள் எப்படி என்னை கண்டு பிடித்தாள் எங்கிருந்து என்னைத் தொடர்ந்தாள் என்பதை என் மூளை ஆராயவில்லை.

அரசு.... உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்னு சொல்லிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் உங்க வண்டில போலாமா என் வண்டில போலாமா என்று என்னைக் கேட்டவுடன் எனக்குச் சம்பந்தமில்லாத அல்லது தேவையில்லாத ஒரு நிகழ்வாய் அது பட்டதின் பின்னணியில் என்னுடைய முற்போக்கு மூளையும், நிலையாமைக் கொள்கையும் இருந்தை அவள் அறிந்திருக்க முடியாது.

ஏதோ ஒரு நிகழ்வின் உந்துதலில் அவளுடைய வண்டியிலேயே பயணித்து எங்கே போகிறாய் என்று கேட்கும் முன்னாலேயே காரை அவள் நிறுத்திய இடம் நுங்காம்பாக்கம் ஹை ரோட்டில் ஒரு நட்சத்திர ஹோட்டல். அந்த காஃபி சாஃப் உள்ளே நுழையும் போது கவனித்தேன் மேட்ச் பாயிண்ட் என்ற வாசகத்தை... எனக்குள்ளேயே சிரிப்பு வந்தது...! சற்றும் மேட்ச் ஆகாத என்னைக் கொண்டு வந்திருக்கும் இடம் மேட்ச் பாயிண்ட்.

கவிதைகளையும், கட்டுரைகளையும், இலக்கியத்தையும் அவள் விமர்ச்சித்த விதமும், வேகமும் நான் எதிர்பார்க்காதது. முறிந்த சிறகுகள்ல கலீல் ஜீப்ரான் என்ன சொல்றாருனா... அவள் பேச பேச மெல்லிய வெளிச்சத்தில் எனக்கு ஒரு வித மயக்கம் கலந்த போதை வந்தது என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள். என்னுடைய கவிதைப் புத்கத்தைக் கையோடு கொண்டு வந்தவள் அதிலிருந்து கேள்விகள் கேட்டுப் பெற்று என்னை அவளிடம் மொத்தமாய் ஐக்கியமாக்க....அவளின் அபரிமிதமான அழகு கொஞ்சம் கூட உதவவில்லை மாறாக....அவளின் அறிவு.....

தினமும், பேச்சுக்களாய்.. சிரிப்புக்களாய்.... தொடர்ந்த அந்த நட்பை காதலென்று அவள் சொன்னாள்... அதுதான் காதலா? என்று நான் அவளிடமும் என்னிடமும் கேட்டுக் கொண்டேன். ஏற்கனவே என் வாழ்க்கைப் பற்றிய புரிதலும், இலக்கியக் காதலும், ஆன்மீகமும் சராசரி வாழ்க்கையை விட்டு என்னைத் தூரமாக்கி வைத்திருந்தன.

ஒரே பையன் எழுத்து, எழுத்து என்றிருக்கிறானே என்று 30 ஐ நான் தொடும் வரை துரத்திப் பிடித்தது என் வீடு, திருமணம் செய்யச் சொல்லி....என்னால்தான் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ரிட்டையர்ட் ஆன பெற்றோர்கள் என் சந்தோசத்துக்குக் குறுக்கே இப்போது வராமல் இருப்பதின் பின்ணனியில் அவர்களின் அனுபவமும், புரிதலும் இருப்பதை மறுப்பதற்கில்லை...

சக நண்பர்களுக்கும், இதர இலக்கியப் போட்டியாளர்களுக்கும் நான் ஒரு பைத்தியம் அல்லது சாமியார் இப்படியான கமெண்ட்களை என் காதுபடவே கேட்டிருக்கிறேன். 33 வயது எனது முறுக்கு ரெளத்ரத்தைக் கிளறி விட்டாலும் உள்ளிருந்து எதோ ஒன்று என்னை அடக்கிக் கொண்டே இருக்கும்.....

பெரும்பாலும் என் உலகத்தில் மனிதர்கள் நிறைய இருப்பார்கள் நானிருக்கமாட்டேன். என் கவனித்தல்களும் உள்வாங்குதலும் எழுத்துக்களாய் மாறும்....இதற்காக என்னைப் பாராட்டுவார்கள் சீராட்டுவார்கள் ஆனால் எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைதானே? அத்னால் அதை நான் பொருட்படுத்துவதில்லை...

என் ஏக்கங்கள் எல்லாம்..
ஏதோ ஒரு உலகத்திலிருக்க
மனிதர்களின் புகழ்ச்சிகளும்
இகழ்ச்சிகளும் என்னதான்
செய்து விடும் என்னை?

ஓரளவிற்கு என்னைப் புரிந்து இருப்பீர்கள் சரிதானே...? இப்படிப் பட்ட என்னிடம் காதலைக் கொண்டு வந்தவள்தான் நந்தினி....பார்த்தீர்களா.. இவ்வளவு நேரம் அவளது பெயரைச் சொல்லவேண்டும் என்று கூட நான் எண்ணவில்லை. நான் அப்படித்தான் பெயர் சொல்லாமல், என் கதை கேட்காமல் நீங்கள் போனால் போங்கள்...நான் எப்போதும் யாரையும் இழுத்துப் பிடித்து வைப்பதில்லை.

என் வார்த்தைகள்
பிடிபடவில்லை எனில்
என் எழுத்தை ஏன்
மாற்றச் சொல்லுகிறீர்கள்
உங்கள் செவிகளை..
இருக்கப் பொத்திக் கொள்ளுங்கள்..!

இப்படி இருப்பதாலேயே திமிர் பிடித்தவன் என்று என்னை பெரும்பாலும் எல்லோரும் ஒதுக்கினாலும் திருட்டுத்தனமாய் என் எழுத்துக்களை வாசிப்பதையும், கவிதைகளை எடுத்து உபயோகம் கொள்வதையும் அறியாதவனில்லை நான். போகட்டும்... மனிதர்களின் கபட எண்ணங்களோடு போட்டியிட நானில்லை...

எலும்பு பொறுக்கும் நாய் போல ஊரில் இருப்பவர்களின் கருத்துக்களை எல்லாம் பார்த்துப் பார்த்துச் சேர்த்து என்னைத் தீர்மானிப்பவனில்லை நான். நந்தினிக்கு என்னைப் பிடித்துப் போனது அவளது துரதிர்ஷ்டம்தான் என்று சொல்வேன். இலக்கில்லாமல் பயணம் செய்த என்னை ஒரு கட்டுக்குள் கொண்டு வர அவள் முதன் முதலாய் செய்த முயற்சி அசிங்கப்பட்டுப் போனது.....சென்னை மெரினாவில்...

காலையில் வாக்கிங்க் போக மனிதர்கள் மெரினா போவார்கள் நான் மனிதர்கள் வாக்கிங் போவதை பார்க்கப் போவேன். என்னைப் பார்க்க நந்தினி வருவாள். அவளின் இலக்கியம் சார், கடவுள் தேடல் சார், விழிப்புணர்வு சார் பேச்சுக்களை ரசித்த என்னால் அவளின் லெளகீக தத்துப் பித்துக்களை ரசிக்க முடியவில்லை.

முதலில் என்னை ஏன் நீங்க வாக்கிங் போனால் என்ன? என்று அவள் கேட்டு விட்டு என் உடல் நலம் பற்றிய அக்கறையை அவள் வார்த்தைகளில் கொண்டு வந்ததிற்கு பின்னால் அவளின் காதல் இருந்தது என்பதை விட......இனி நீ என் பொருள்... நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லிய அடக்குமுறை தான் நளினமாய் வெளிப்பட்டது...

பல முறை அவளிடம் சொல்லியிருக்கிறேன். உன் காதலும் என் காதலும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக மட்டும் இருக்கட்டும் மாறாக அடக்க வேண்டாம், அறிவுறுத்த வேண்டாம் என்று....அவள் என்ன செய்வாள்? உலக நியதிகளின்படி என்னைக் காதலிக்கிறாள்..........நான் அவளைப் பிரபஞ்ச நியதிகளின் படி காதலிக்கிறேன்...! இப்படி அவளிடம் நேரேயும் சொல்லி விட்டேன்.. அப்படிச் சொன்ன பிறகு உலக நியதியும் பிரபஞ்ச நியதியும் என்ன? என்று அவள் கேட்டதை ரசித்தேன்.. அது சம்பந்தமான அவளின் வேகமானப் பேச்சை ரசித்தேன்...ஆழமான அறிவினை ரசித்தேன்....

காற்றில் பறக்கும் அவளின் கேசத்தை ரசிக்கவும், கூரான நாசியையும், அலையும் விழிகளையும், அளவான உதட்டையும் என் மனது ரசிக்கச்சொல்லி என்னைத் திசை மாற்றிய பொழுது எல்லாம் அதைக் கிட்டத்தட்ட செருப்பால் அடித்து இருக்கிறேன். காமம் இங்கே தவறாகக் கையாளப்படுகிறது..... என்னைப் பொறுத்த வரையில்..... ரசிப்பு...ரசிப்பில் லயிப்பு... லயிப்பில் அன்பு, அன்பில் காதல்...அந்தக் காதலை வெளிப்படுத்த எல்லாவகையிலும் முயன்று உச்ச பட்சமாக அதை வெளிக்காட்ட காமம்.....

கடைசியில் வரும் காமம் பூர்த்தி செய்யும் ஒன்றாய் வரவேண்டும்...! பூரணத்தின் அருகே கூட்டிச் செல்லும் அந்த நிகழ்வில் காதலையும் அன்பையும் வெளிப்படுத்தும் போக்கு இருக்கவேண்டும்....! ஆனால் இங்கே என்ன நிகழ்கிறது.....காமத்தின் பால் எல்லாம் நிகழ்கிறது, காமமே பிரதானம் அதை மையப்படுத்தி மற்ற எல்லாம் வருகிறது..........அதனால்தான் முரண்கள்....

நீயும் நானும் இனி காதலன் காதலி போர்வை போர்த்த முடியாது. நட்போ என்ன கருமமோ நமது தொடர்பு அறிவு சார்ந்ததாக இருக்கட்டும்.....அதைக் காதல் என்ற கட்டுக்குள் கொண்டு வராதே நந்தினி...உன் அதிர்வுகள் என் படைக்கும் திறனைக் குலைத்து விடக்கூடாது மாறாக அது உத்வேகம் கொடுத்து அதிகப்படுத்துவதாய் இருக்கவேண்டும். நான் எப்போதும் கவிதைகள் எழுதுவேன்.. சில நேரம் காதல் கவிதைகள் கூட எழுதுவேன்.. அதில் உன்னைப் பற்றிக் கூட எழுதினாலும் எழுதுவேன் அது என் மனோ நிலை பொறுத்த விசயம். ஆனால் உன்னை மட்டுமே எனக்குள் நிரப்பி வைத்துக் கொண்டு என் ஏகாந்த கனவுகளை என்னால் சிதைத்துக் கொள்ள முடியாது. நாம் பிரியவேண்டாம் ஆனால் உன்னை நானும் என்னை நீயும் கட்டுப்படுத்த வேண்டாம்.

நீ என்னைக் காதலிக்காதே என்று சொல்லமாட்டேன்.....ஆனால் என்னால் உன்னை மட்டும் காதலிக்க முடியாது. என் உலகத்தில் காதல் என்ற வார்த்தையின் பொருள் வேறு அது சராசரி மனிதர்களால் ஜீரணிக்க முடியாதது என்பதாலேயே திருமணமே வேண்டாமென்று நகர்ந்து இருக்கிறேன். உன்னைப் பிடித்திருக்கிறது......அதுவும் உன் அறிவால் ஏற்பட்ட ஈர்ப்பு.......ஆனால் உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது என்று பொய் சொல்ல மாட்டேன்.

நந்தினியால் என்னை எதிர் கொள்ள முடியவில்லை. அழுதாள்...அழுதாள்...விளக்கினாள்..எடுத்துச் சொன்னாள்... ஆனால் எல்லாமே என்னைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுப் போயின. அவள் காயப்பட்டிருப்பாள் என்பது தெரியும் ஆனால் இந்தக் காயம் பல வகையில் சிறந்தது. இல்லையெனில் என்னைக் காதலித்துக் கட்டுக்குள் வைக்க திருமணம் அது இது என்று போய்...ரொம்பவே காயப்பட்டிருப்பாள்.

தோள் சாய வந்தவளைத் தோளில் சாய்த்துக் கொண்டேன்...........கரம் பற்றிச் சொன்னேன். இனி அறிவு சார்ப் பயணமாய் இருக்கட்டும் நமது உறவு........நான் போகிறேன் என்று சொன்னேன்... அவள் அழுதாள்...! சொல்லி முடித்து விட்டு..........நான் உன்னை நேசிக்கிறேன் நந்தினி........! ஏதாவது தேவையென்றால் சந்கேகம் என்றால் நான் உன்னை அழைக்கிறேன் நீயும் என்னை தேவை என்றால் அழை........வருகிறேன்............

மீண்டும் சொல்கிறேன் நான் உன்னை நேசிக்கிறேன்....சொல்லி விட்டு அவளின் கார் விட்டு இறங்கி வந்து விட்டேன்......!

வீட்டுக்கு வந்தவுடன் முகம் கழுவி என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுத ஆரம்பித்ததுதான்....

நான் உன்னிடத்தில் இல்லை...
நான் உனக்கானவனும் இல்லை...
காற்றை யார் கட்டுப்படுத்த...
கடலை யார் அள்ளிக் குடிக்க....
திக்கெட்டும் அலையும் தீயைக்
குடிசைக்குள் அடைக்க முடியுமா?
வேங்கைகள் எப்போதும் சமதானம் பேசுவதில்லை
போராளிகள் காதலென்ற போர்வையை
எப்பொதும் போர்த்துவதில்லை..!

மாலை முழுதாய்ச் சென்று விட்டது........! இரவின் ஆக்கிரமிப்பு தொடங்கி விட்டது......நான் ஆழமாக சுவாசித்தேன்.......மறுபடியும்....கீழிறங்கி எனது அறைக்கு வந்தேன்....

என்னோடு யாருமில்லாவிட்டால் என்ன?
இரவும், பகலும், காற்றும், மரமும்
இல்லாமலா போய் விடும்?......

நான் எழுதிக் கொண்டிருந்தேன்......


தேவா. S

Comments

சூப்பர் ரொம்பவே ரசித்து படித்தேன் சகோதரா.... என்னை ரொம்ப கவர்ந்த வரிகள்
""வேங்கைகள் எப்போதும் சமாதானம் பேசுவதில்லை
போராளிகள் காதலென்ற போர்வையை
எப்பொதும் போர்த்துவதில்லை..!:::
சூப்பர் சூப்பர் சூப்பர்.....
Chitra said…
வித்தியாசமான கவிதைகள்... கருத்துக்கள்..... கதையில் தெளிக்கப்பட்டு இருப்பது, சுவாரசியமாக இருக்கிறது. கதையில் காணப்படும் புதிய எழுத்து நடையும் அருமையாக வந்து இருக்குது.
கதை அனுபவம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதே .....ம்ம்ம்ம்ம்ம்..... அனுபவம்??? ம்ம்ம்ம்....
//சலனமற்ற குளத்தில்
எறியப்பட்ட கல்லாய்...
என்னைக் கலைத்துப்
போட்டது ஒரு காதல்....!//

காட்சி கற்பனையில் ஓடுகிறது. சலனப்பட்ட அந்தக் குளம் சிறிது நேரத்திற்குப் பின்னர் அலை அலையாக வந்தவை ஓய்ந்து மறுபடியும் சலனமற்ற அந்த நிலைக்கே திரும்பிவிடுமே... :-)
ம்ம்ம் வித்தியாசமான பதிவு, உங்கள் அனுபவம் என்பதால் நீங்கள் வித்தியாசமானவர் என்பது தெரிகிறது.
இடையில் செருக்கப்பட்டிருந்த கவிதைகள் அனைத்தும் அனுபவப்பதிவை அழகாக எடுத்துசேர்க்கிறது.

//சலனமற்ற குளத்தில்
எறியப்பட்ட கல்லாய்...
என்னைக் கலைத்துப்
போட்டது ஒரு காதல்....//

இங்கே காதல் வழிகிறது...

//வேங்கைகள் எப்போதும் சமதானம் பேசுவதில்லை
போராளிகள் காதலென்ற போர்வையை
எப்பொதும் போர்த்துவதில்லை..//

இங்கே உங்கள் ஆழ்மனம் தெரிகிறது.... அருமையான பதிவு சகோ....
ரொம்ப நல்லாருக்கு! வார்த்தை பிரயோகமெல்லாம் சூப்பர்!
venkat said…
//என்னோடு யாருமில்லாவிட்டால் என்ன?
இரவும், பகலும், காற்றும், மரமும்
இல்லாமலா போய் விடும்?......
\\


நச் ....
Radha said…
//ரசிப்பு...ரசிப்பில் லயிப்பு... லயிப்பில் அன்பு, அன்பில் காதல்...அந்தக் காதலை வெளிப்படுத்த எல்லாவகையிலும் முயன்று உச்ச பட்சமாக அதை வெளிக்காட்ட காமம்.....//

இதுவும் உலக நியதி என்று தோன்றுகிற்து. :-) ஆனால் நிறைய பக்குவமானது... [ பிரபஞ்ச நியதியில் உச்சக்கட்ட அன்பை வெளிக்காட்ட காமம் கட்டாயத் தேவையா என்ன? ]
***********
இவ்ளோ பெருசா கதை எழுதினா செய்தால் கை வலிக்காது ? :-)
எதனையும் அடக்க விரும்பாத
எதனுள்ளும் அடங்க விரும்பாத
கதாபாத்திரத்தைத் தாங்கிய
இந்தப் படைப்பு கூட
கதை என்கிற தலைப்புக்குள்
அடங்காது இருப்பின் சிறப்பாய்
இருந்திருக்குமோ?
யாரும் அவ்வளவு எளிதாக
புரிந்து கொள்ளமுடியாத
ஒரு கதாபாத்திரத்தை மிகச் சரியாக
புரியவைத்ததில் இருக்கு
உங்கள் எழுத்தின் சிறப்பு.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
//என்னோடு யாருமில்லாவிட்டால் என்ன?
இரவும், பகலும், காற்றும், மரமும்
இல்லாமலா போய் விடும்?....//

தேவா அண்ணா...
அருமையான இலக்கியம் கலந்த எழுத்து... படிக்க படிக்க சுவை மாறா எழுத்து. ரொம்ப நல்லா வந்திருக்கு.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த