Skip to main content

யாதுமானது ...!


























தனிமர்ந்திருந்தேன் அன்றொரு நாள்..! உள்ளிருந்து கிளைந்தெழுந்த ஒரு உணர்வு என்னிடமிருந்து விலகி நின்று என்னை உற்று நோக்கியது..! மெல்ல வியர்த்து வியந்தேன்...சப்தங்கள் உள் வாங்கிய தொண்டையிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டு நீ யாரெனெ துணிச்சலை கைக்கொண்டு ஒரு கேள்வியை பிறப்பித்தேன்....மருண்ட விழிகளோடு....!

எம்மை நோக்கி தொடுக்கப்பட்டதா உமது கேள்வி என்ற பதில் கேட்டு மெல்ல எச்சில் மிடறு விழுங்கி ஆம்... ஆம்.. உம்மை நோக்கிதான் என்று பதில் பகின்று காத்திருந்தேன். திக்கெட்டும் ஒலிக்க ஒரு சிரிப்பொலி எனக்கு முதல் பதிலானாது அதைத் தொடர்ந்து....

எம்மை இறையென அறி; எமது பெயர் சிவமென புரி... என்ற பதிலில் வியர்த்திருந்த நான் மெல்ல துணிச்சலை கைக் கொண்டு... இறையென்றால் நலமன்றோ பயக்கும். வீணில் ஏன் எனக்கொரு அச்சம். எம்மிடம் இருக்கும் கேள்விகளே இப்போது மிச்சம் அவற்றை குறையில்லாது எம்முன் இறையென்றறிவித்து உரை பகின்ற அந்த உருவமற்ற உச்ச சக்தியிடமே கேட்போமென்ற துணிவு வந்தது.

ஓ... நீர்தான் இறையோ...!!!! உம்மை சிவமென்கிறார், சிலை என்கிறார், உரு என்கிறார் அரு என்கிறார், எமது ஊரில் பலப் பல பெயர்கள் வேற்று நாட்டில் உனக்கு வேறு பெயர்; உம்மை இல்லை என்கிறார் சிலர்; உண்டு என்கிறார் சிலர்....

நீர் தான் இறையென்றால் உமக்கு தெளிந்தவொரு பதமில்லையோ...? மானுடரை குழம்ப விட்டு ஆடுவதில் உமக்கு என்ன அப்படி ஒரு சுகம்...?

பிரமாண்டம் இப்போது நிசப்தமானது.. மெல்ல மெல்ல அசைந்து பின் அசையாதிருந்து.....பின்

எமது தொழில் என்ன தெரியுமா என்று இறையென்று அறிவித்த ஒன்று என்னிடமே கேள்வி கேட்டு நான் பதில் சொல்ல முயன்ற கணத்தில் அதுவே விடை பகின்றது....

எனது பெயர் கூத்தன். எனது தொழில் கூத்து.

நீ ஒரு கூத்து, உன்னை சுற்றியிருக்கும் மானுடரும் விலங்குகளும் இயற்கையும் ஒரு கூத்து, சுற்றும் பூமி ஒரு கூத்து, பூமியை பெயர்த்தெறிந்த சூரியனொரு கூத்து.. இவையெல்லாம் நீ அறிந்த கூத்துகள். மானுடராய் நான் நடத்தும் கூத்துக்களில் மானுடரென அறியப்படுபவருக்கு எனது இன்ன பிற கூத்துக்கள் அறிதல் அவ்வளவு சாத்தியமில்லை. அறிய வேண்டுமெனில் அவரின் மனம் மறந்து செயல் மறந்து, உடல் மறக்கும் கணத்தில் எம்மில் எம்மாய் அவர் மாறும் அபூர்வம் நிகழும். அக்கணத்தில் உணர்தல் சாத்தியம் பகிர்தல் சாத்தியமில்லை.

என்னின் இன்ன பிற கூத்துக்களாய் ஆழிக் கூத்து, ஊழிக் கூத்து, அகண்ட கூத்து, ஐம்பூதக் கூத்து, சிவ தத்துவக் கூத்து, வித்தியா தத்துவ கூத்து, ஆன்ம தத்துவக் கூத்து, என்று பரந்து விரிந்த எமது கூத்துக்களில் உம்மால கைக்கொள்ள இயன்றது உடலளவில் ஆனம் தத்துவக் கூத்துக்கள்தாம்... அட்டமா சித்திக்களாய் நீவிர் அறிவனவும் கூத்துக்கள்தான்...

எம்மை விளங்க வேண்டி மானுடராய் நானே தான் அலைகிறேன். ஒவ்வொரு நிலையிலும் விளங்க அலைந்து விளக்கமெல்லாம் பொய்யன்றறிந்து விளக்கத்தை விட்டு உணருதல் நிலையில் என்னை அடைகிறேன்.

முரண்... யாம் சமைத்தது. முரணற்று யாமிருந்தது எமது பூர்வ நிலையாகும். எமது பூர்வத்தில் யாம் இருந்த நிலை உமது கற்பனைகளுக்கும் எட்டாத ஒரு நிலை. கற்பனையில் யாதொன்று தோன்றினாலும் அது பொய்யே...! எம்மின் மெய்யறிய யாமாய் நீர் மாற வேண்டும்!

நீர் கூறும் முரணெல்லாம் யாமே சமைத்தோம். அவையெல்லாம் எம்மை யாமறிய யாமே வைத்துக் கொண்ட சத்திய சித்துக்கள். கலங்காதே.. நீ உன்னை நானென்றறிய இவையெல்லாம் பாடமாகக் கொள். இயற்கையில் சமம் என்றொன்று இல்லை என்று அறி; புத்தி தெளி; நேர், எதிரென்ற முரண்கள் எல்லாம் இயக்க விதிகள் என புரி;

இடி முழக்கமென எனக்கு கிட்டிய பதில்கள் பகுதி எனது செவியிலேயே ரீங்காரமிட, மிகுதி தலைக்குள் சென்று மூளையின் செல்களோடு புரிதலுக்காய் போராட நான் திக்கித் திணறி சமாளித்து.... மீண்டும் ஒரு கேள்வியை இறைக்கு இரையாக்கினேன்...!

நான் வணக்கும் சிவபெருமான் யார்? உமக்கு உருவமில்லையெனில் அந்த சித்திரத்தில் அரவத்தை தோள் கொண்டு சடா முடியோடு தோன்றும் மனிதன் யார்? நீயா ? நீயில்லையா? உமக்கு உருவமில்லையெனில் ஏன் நான் அந்த சித்திரத்தை வணங்க வேண்டும்.....?

புன் முறுவல் போன்ற ஒரு உணர்வோடு என்னை அரவணைத்த இறை மீண்டும் மீட்டத் தொடங்கியது....

ஹா ஹா ஹா .....! நீ நானாகும் வழியிலிருப்பதை அறிகிறேன்!. உனது கேள்விகளே உமது பயணத்திற்கான துருப்புச் சீட்டு.... எம்மிடம் கேள்விகளை வினயமின்றி வைப்போருக்கு பதில்கள் எப்போதுமுண்டு. சந்தேகம் கொள்பவரின் புத்திகளை யாம் சீண்டுவதில்லை. அவை ஜென்மங்களாய் அலைந்து அலைந்து அனுபவம் கொண்டு பதில்கள் பெற ஒரு விதியினை அவற்றுக்கு யாமே இட்டிருக்கிறோம்.

நீர் வணங்கும் அந்த மனிதன் முதன் முதலில் மனித இனம் தோன்றிய பின்பு தன்னை நானாக உணர்ந்த மனிதன். முதல் முக்தன்! முதல் ஜீவிதன்.....! கருத்துக்களால் சூழப்பட்ட நீ கேள்விகள் கேட்பதற்கு உனக்கு புறச்சூழல் உதவுகிறது, இதற்கு முன் என்னை உணர்ந்தவர் விட்டுச் சென்ற பதில்களில் இருந்து தெளிவு கிட்ட வாய்ப்புள்ளது ஆனால்.....

முதல் முக்தனுக்கு என்னை உணர்தல் அவ்வளவு எளிதன்று..அவனின் பெயர் ருத்ரன். அவன் என்னை உணர சுடலையிலேயே வசித்தான். சுடலையின் பொடி பூசி நானும் ஒரு நாள் இறப்பேன் என்று கதறி கதறி தனக்குள்ளெயே கூவி... நான் யாரென்று தன்னுள் கேள்விகள் கேட்டுத் துடித்தான்.

கொடும் விஷம் கொண்ட நாகத்தை எடுத்து தன் கழுத்தில் கட்டிக் கொண்டு நானும் நீயுமொன்று என்று பித்தனாய் புலம்பினான். சுடுகாட்டில் இருந்த மண்டை ஓடுகளை தனது கழுத்தில் அணிந்து கொண்டு பேயாய் சுற்றினான். எரியும் பிணங்களுக்கு முன்பு அவன் இருந்த தியான உச்சத்தில் அவன் சிவமாகிய என்னை உணர்ந்தான்.

அதனால்தான் அவனை சிவத்தை உணர்ந்த பெருமான் அதாவது சிவபெருமான் என்றழைத்தனர். என்னை யாரும் கண்டிராததால் எமக்கும் உருவொன்று இல்லையாதலால் எம்மை உணரும் முதல் நிலையாய் அவன் உருவம் வரைந்து உருவேற்றி வணங்கத் தொடங்கினர் உன் போன்ற மானுடர்....

இதோ இன்று நீ கேள்விகள் கேட்டாய் நான் ஏன் இந்தப் படத்தை வணங்கவேண்டுமென்று...? இப்படி கேள்விகள் எழும் வரை மானுடர் சிலைகளையும், மரங்களையும் படங்களையும் வணங்கத்தான் செய்வர். கேள்விகள் ஜனிக்க வைக்கப்பட்ட சூட்சும இலக்குகள் இவையெல்லாம்.

இன்று நீ உணர்ந்தாய் நான் யாரென்று....! உனக்கு அந்த சித்திரம் இனி அவசியமில்லை ஆனால் உன் வீட்டில் பெண்டு பிள்ளைகள் இருப்பரே.. அவர்கள் கேட்டனரா இக்கேள்விகளை....? ஆமெனில் அந்த சித்திரங்களை தூக்கியெறி இல்லையெனில் அவர்கள் கேள்விகள் கேட்கும் வரை தொடரட்டும் உமது வழிபாடு...

இப்பிறப்பில் இல்லாவிட்டாலும்...வேறு உடலை அவர்களின் ஆன்மா தொடும் போது இப்போது தொடர்ந்த வழக்கம் கேள்விகளாய் ஜனித்து அவர்களை கடைத் தேற்றும்...! அது வரை நீ நடி...... எம்மைப் பற்றிய புரிதலை அறியாதவன் போல கேள்விகள் கேட்டு மானுடரின் மனதில் கேள்விகளைப் பதியம் போடு...!

உனக்குத் தெரியும் நான் யாரென்று... எனக்குத் தெரியும் நீ நானென்று.....உனது பணி தொடரட்டும்.....!

என்னுள் இறையாய் நின்று ஸ்பூரித்த இறை என்னும் ஒரு சூட்சுமம்...ஏதோ ஒரு பலத்த சப்தம் எனக்கு அருகே கேட்க தொடர்பற்றுப் போனது. நான் கண் விழித்தேன்....ஒரு பூனை பாத்திரத்தை தள்ளி விட்டு என்னைக் கடந்து ஓடியது.

என் தியானம் கலைய.....என் சிந்தனைக்குள்... நான் தேடிய இறை நான் தானா?

...என்ற கேள்வி ஓடிக் கொண்டிருக்க என் விழிகள் கண்ணீரோடு நிலை குத்திப் போய் மேலே ஓடிக் கொண்டிருந்த மின் விசிறியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க...

நான் மீண்டும் இல்லாமல் போனேன்....!


தேவா. S


Comments

எனக்கு இந்த வழ வழ பேச்சில் எல்லாம் நம்பிக்கை இல்லை..

வெட்டு ஒன்னு துண்டு இரண்டு என்பது போல பதிலை சொல்லுங்க....
நீங்க உண்மையில் ஆன்ம விழிப்புணர்வு பெற்றவரா..Are U Enlightened?
நீங்க இல்லற யோகியா?

உங்கள் உண்மை நிலை என்ன?
உதாரணத்துக்கு நீங்கள் விவேகானந்தர் போன்ற தியான தன்மை கொண்டவரா????

ரஜினி பற்றி பேசும் போதும் ஒரு சாதாரண பற்று கொண்ட மனிதனை போல புலம்பி தள்ளுகிறீர்கள்...
திடீர் என்று சிவன் போல பிரபஞ்சம் எங்கும் நீங்கள் இருப்பதாக சொல்லுகிரிர்கள்...உங்கள் உண்மை நிலை என்ன?

முதலில் உங்களை பற்றி விளக்கமாக சொல்லுங்கள்..
இந்திய மண்ணில் பிறந்த தேடல் உள்ளவன்...விழிப்பு பெற்றே தீருவான்.... விழிப்புணர்வு பெற ஆயிரம் கட்டுரை தேவை இல்லை....ஒரே ஒரு கட்டுரை போதும்...
அல்லது உங்கள் எழுத்து வெறும் தத்துவ கற்பனையா....?


நானும் சில நேரம் அந்த ஏகாந்த வெட்ட வெளி சாரலில் ஒரு துளி ரெண்டு துளி என் மீது பட்டு தெறித்து போன்ற நிலையை உணர்ந்தவன் என்பதால் உங்களிடம் இந்த கேள்வியை கேக்கிறேன்..ஆனா நான் பழைய படி நமிதா படம் பார்க்க போயிருவேன் ...ஏன்னா என் மன பதிவுகள் அந்த மாதிரி :) :)
dheva said…
//வெட்டு ஒன்னு துண்டு இரண்டு என்பது போல பதிலை சொல்லுங்க....
நீங்க உண்மையில் ஆன்ம விழிப்புணர்வு பெற்றவரா..ஆரெ ஊ ஏன்லிக்க்டெனெட்?
நீங்க இல்லற யோகியா?//

நான் யாரென்று நான் தான் தெளிய வேண்டுமேயன்றி நான் யாரென்று மற்றவர்க்கு ஏன் பகிர வேண்டும்.

//ரஜினி பற்றி பேசும் போதும் ஒரு சாதாரண பற்று கொண்ட மனிதனை போல புலம்பி தள்ளுகிறீர்கள்...
திடீர் என்று சிவன் போல பிரபஞ்சம் எங்கும் நீங்கள் இருப்பதாக சொல்லுகிரிர்கள்...//

ரஜினி என்ற மனிதரை எனக்கு பிடிக்கும். அப்படி பிடிப்பதாலேயே எனது ஆன்ம தேடலும் எனது தெளிவுகளும் இருக்க கூடாதா என்ன...? ஹா ஹா!

//இந்திய மண்ணில் பிறந்த தேடல் உள்ளவன்...விழிப்பு பெற்றே தீருவான்.... விழிப்புணர்வு பெற ஆயிரம் கட்டுரை தேவை இல்லை....ஒரே ஒரு கட்டுரை போதும்...//

எனது தேடலின் வழியே நான் கொண்ட தெளிவுகளை எழுதிக் கொண்டே செல்கிறேன். இதை வாசித்து அதில் ஏதேனும் தோன்றி தெளிவுகள் ஏற்படலாம் ஏற்படாமலும் போகலாம்....

நான் எழுதி விட்டேன் அதில் சத்தியம் இருக்குமெனில் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் குப்பைத் தொட்டிக்கு போகட்டும் இக்கட்டுரை.

//உங்கள் எழுத்து வெறும் தத்துவ கற்பனையா....?//

எனது தெளிவினையும் புரிதலையும் பகிர்கிறேன் கிஞ்சித்தேனும் கற்பனை இல்லை.

//நானும் சில நேரம் அந்த ஏகாந்த வெட்ட வெளி சாரலில் ஒரு துளி ரெண்டு துளி என் மீது பட்டு தெறித்து போன்ற நிலையை உணர்ந்தவன் என்பதால் உங்களிடம் இந்த கேள்வியை கேக்கிறேன்..//

ஓ....கிரேட். வாழ்த்துக்கள் தனிக்காட்டு ராஜா!

//உங்கள் உண்மை நிலை என்ன?//

என்னை பற்றி அறிதல் எனக்கு மட்டுமே பயன் தரும். இக்கட்டுரையின் மூலம் உங்களைப் பற்றிய அறிதலை தொடர உதவியிருக்கிறேனோ இல்லையோ தெரியாது ஆனால் நான் ஞானியென்றோ, துறவியென்றோ எந்த வார்த்தை அலங்காரங்களையும் கூற இயலாது.

நான் நானாயிருக்கிறேன்.. எனது தேடலில் போது எனக்கு கிடைத்ததை உங்களிடம் பகிர்கிறேன். அவ்வளவே...!

நன்றிகள் தனிக்காட்டு ராஜா உங்களின் அன்புக்கு!
தேடல் உள்ளவன் உண்மையை உணர்வான் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம் அண்ணே :)
dheva said…
தனிக்காட்டு ராஜா@ நன்றி தம்பி!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த