Skip to main content

மெளன குரு....!






















எதன் தாக்கமுமில்லை. எதனையும் எழுத்தாக்க வேண்டும் என்ற எண்ணமுமில்லை. பாய்ந்து சீறும் வரிப்புலியாய் எதையேனும் சாடத் தோன்றவில்லை. வெது வெதுப்பான சமைத்து வெகு நேரமாகி காலியாய் கிடக்கும் ஒரு அடுப்பில் சுருண்டுக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு சுகமாய் உறங்கும் ஒரு பூனையைப் போல அமிழ்ந்து கிடக்கிறேன்.

பகிர்தலின் அவசியம் என்ன என்று ஒரு கேள்வி வந்து இடையை இடையே ஏற்படும் ஏதோ ஒரு சப்தம் போல என் உறக்கத்தை தொந்திரவு படுத்த அவ்வப் போது கண்கள் திறந்து பார்த்து காது சிலிர்த்து சப்ததத்தையும் உள்வாங்கிக் கொண்டு மீண்டும் பகுதி பிரித்த இமைகளை மூடிக் கொண்டு என் உலகில் பயணிக்கிறேன்.

பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டா போய் விடும் என்று மனிதர்கள் கேலி பேசலாம். விழித்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருக்கும் மனிதனுக்கு உலகம் இருளத்தான் செய்யாது,. ஆனால் கண்களை மூடிக் கொள்ளும் பூனைக்கு உலகம் இருண்டு போவது உண்மைதான் அதன் லயிப்பு உண்மைதான். அதன் சுகம் உண்மைதான்.

விமர்சித்தலும், விவாதித்தலும் மனிதர்களின் தீராத இரண்டு வேட்கைகள். வாழ்க்கையின் சிக்கல்களை தீர்த்துக் கொள்வதிலும் தீர்ப்பதிலும் ஒரு மும்முரமான ஓட்டம் இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கிறது. எனக்கு என்னவோ சட்டென்று ஒரு அலுப்பு வந்து விடுகிறது இப்போது எல்லாம்.

எல்லோரும் செய்வதை எல்லாம் பார்த்தால் மிகைப்பட்ட பேர்கள் ஒரே மாதிரியே நினைக்கிறார்கள், கதைக்கிறார்கள், ஆனால் செய்யும் போது தங்களுக்கு இஷ்ட்மான ஒரு வழிமுறையில் செய்கிறார்கள். அப்படி செய்யும் போது செயலின் தன்மைகளால் வித்தியாசப்பட்டு போகிறார்கள் என்பதையும் தெளிவக உணர முடிகிறது.

எனக்குத் தெரிந்து முதன் முதலில், மீசையை மழிக்க வேண்டும் என்று நினைக்கும் அத்தனை பேரும் அப்படி மழித்த பின்பு தான் மீசையை சரி செய்யத்தான் முயன்றதாகவும் அப்படி சரிசெய்கையில் அதன் அளவில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் மீசையை எடுத்ததாகவும் கூறுவார்கள். இதை நான் ரிப்பீட்டடாக பல பேரிடம் கேட்டு இருக்கிறேன் நானும் கூறியும் இருக்கிறேன்.இங்கே ஒரு விடயத்தை நான் உற்று கவனித்து பகிர விரும்புவது யாதெனில்...மனித ஆழ்மனம் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறது என்ற அற்புதத்தைதான்.

தான் என்னும் ஒரு அகங்காரம் கூடிப் போகும் போது இப்படி சிந்திப்பதை செயலாக்க முயலும் மனிதர்கள் வழிமுறைகள் வெவ்வேறு விதமாக அமைந்து போகின்றன. தன்னின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே ஒவ்வொரு மனிதனும் முயல்கிறான் ஆனால் எவ்வகையில் என்று பார்க்கும் போது விட்டுக் கொடுத்தும், சந்தோசப்படுத்தியும், கூச்சலிட்டும், விமர்சித்தும், ஆள், அம்பு, படைகளை பயன் படுத்தியும், அகங்காரப்பட்டும், அமைதியாயிருந்தும் ஏதேதோ செயல்களைச் செய்து தன் மூல நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே முயல்கிறான்.

செய்யும் ஒவ்வொரு செயலும், இவனும், அவனும், அவளும் செய்தார்கள் என்பதோடு மட்டும் நின்று விடுமா என்ன? செயலின் விளைவுகள் செய்த தன்மையைப் பொறுத்து பலனையும் ஒவ்வொருவருக்கும் பெற்றுக் கொடுக்கவும்தானே செய்யும். வேகமாய் அடித்தால் வேகமாய் திரும்பி வருகிறது, மெதுவாய் அடித்தால் மெதுவாய், சாந்தமெனில் சாந்தம் என்று மீண்டும் அது எங்கே இருந்து பிறந்ததோ அங்கேயே பதிலாய் விளைவுகள் பதிவாகிறது. மீண்டும் அதற்கான செயல்கள், விளைவுகள்.....என்று முடிச்சிட்டுக் கொண்டே நகரும் வாழ்கையில்.....

நான் முடிச்சினை அவிழ்க்க விரும்பிகிறேன். அதற்காய் செயலினை செய்யும் வழிமுறைகளை கவனமாய் ஆராயத் தொடங்குகிறேன். பேசுவது வேறு, எழுதுவது வேறு செயல் படுவது வேறு. பேசுவதைப் போலவும், எழுதுவதைப் போலவும் மனிதர்கள் அனைவரும் வாழத் தொடங்கியிருந்தால் வாழ்க்கையைப் போன்ற ஒரு அற்புதமான விடயம் வேறொன்றும் இருந்திருக்கவே முடியாது. உலகமே அன்பு மயமாய்த்தான் இருந்திருக்கும். மனிதர்கள் அனைவருமே ஹுப்போகிரேட் தான். இதைச் சொல்வது சிலருக்கு கோபத்தைக் கூட வரவழைக்கலாம்.

ஆமாம் இது நடிப்பு என்று கூற வரவில்லை. மனித செயல்களின் இயல்பே இப்படித்தான். சொல்வதை எல்லாம் செய்வதின் சதவிகிதம் கூடி இருப்பவர்களை நாம் உத்தம புருசர்கள் என்று வெண்டுமானால் கூறலாம். இப்படியாய் செயல்களின் வேகம் கூடக் கூட, சொல்வது கொஞ்சம் கொஞ்சமாய் நின்று போக ஆரம்பிக்கவும் செய்கிறது. இப்படி நின்று போவதற்கு தொடர்ச்சியான உற்று நோக்கலும் தத்தம் செயல்களுக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்ளும் ஒரு வித நிதானமும் வந்து சேர்ந்து விடுகிறது.

மனம் என்ற ஒன்றினால் கற்பனைகள் கொள்ளாமல், வார்த்தைகள் வந்து விழுந்து, பேசி பேசி கவர்ச்சி நடனம் ஆடாமல் இயல்பாய் நேரடியாகவே செயல்கள் நடைபெறத் தொடங்குகின்றன. இவர்களை சித்தர்கள் என்றோ, பித்தர்கள் என்றோ, யோகிகள் என்றோ அல்லது சாதுக்கள் என்றோ நான் குறிப்பிட விரும்பவில்லை. ஏனென்றால் இப்படியாய் தங்களை அடையாளப் படுத்தி, ஏதேதோ செய்து முரணாகப் போனவர்களை நீங்கள் கற்பனை செய்யும் ஒரு வாய்ப்பினை அகற்றி விடவே இந்த யுத்தியை செய்கிறேன்.

ஆதி யோகியான சிவன் எனப்படும் ருத்ரன் முழுமையின் ஓட்டத்தை விளங்கிக் கொண்ட பின்பு, வாழ்க்கையில் இருக்கும் போலிகளை உணர்ந்து கொண்ட பின்பு, பேசி பேசி வெறும் சக்கையை அரைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களிம் சென்று பகிர்ந்து ஒன்றும் ஆகாது என்று உணர்ந்த பின்பு, யோக நிலையில் அமர்ந்து விடுகிறார். அவரிடம் வந்து அவர் உணர்ந்த உன்னதத்தை போதிக்கும் படியாய் சிலர் கேட்ட பிறகும் அவர்கள் இருந்த திசை நோக்கியும் ஆதியோகியான சிவன் திரும்பவே இல்லை. அவர்களுக்கு சொல்லி என்ன ஆகப் போகிறது?

கூறுவதில் என்ன பயன்? வெறுமனே கூவிக் கூவிக் கூறிக் கொண்டே இருப்பதால தனக்குத் தெரியும் என்ற ஒரு மமதையைத்தான் நாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். முதன் முக்தனாய் முழுமையை உணர்ந்து கொண்ட ஆதி சிவன் இப்படி செய்வாரா? அவர் முகம் கூட திருப்பாமால் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். தேடுதல் என்பது ஒரு வரம். அதில் விடயங்கள் வேண்டும், தன்னிலை உணரல் வேண்டும் என்று இருப்பவர்களின் பொறுமையே அவர்களின் உயர்வான அறிவு நிலையை எடுத்தியம்பும் காரணியாகிறது.

பல வருடங்களுக்கும் மேலாக பாரமுகமாய் சிவன் இருந்தும் அவரை வேண்டி அவரிடமே அமர்ந்து இருந்த ரிஷிகளைப் பற்றி ஆத்மார்த்தமாய் உணர்வுகள் சரியான ஒரு சமிஞை கொடுக்க வடக்கு நோக்கி திரும்பி இருந்த சிவன், பிரபஞ்ச சத்தியத்தை இவர்களுக்கு உணரவைத்து ஓரளவிற்கேனும் மனிதர்களுக்கு எல்லாம், இந்தப் புவியெங்கும் சென்று சேரச் செய்யலாம் என்று நினைத்து தெற்கு நோக்கி திரும்புகிறார்.

அவ்வளவுதான்.....தெற்கு நோக்கி திரும்பினாரேயன்றி தொடரும் மெளனத்தினாலும் தனது கருணைப் பார்வையாலுமே போதிக்கத் தொடங்குகிறார் ஆனால் பேச்சில்லை. இருந்ததனை இருந்தது போல இருந்து காட்டினார். கேட்கவும், சொல்லவும் யாரும் தேவையில்லை, என்று போதனை மெளனத்திலேயே அதிர்வுகளாகப் பரவிக் கொண்டிருக்க ஏழு பேருக்கும் ஞானா உபதேசம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஞானத்தை வார்த்தைகளால் கூறி யாருக்கும் விளக்க முடியாது. மெளனமான உணர்தலாய் புரிய வைக்க முடியும்.

இதுதான் மெளன குரு தத்துவம். புத்தர் இதனை முழுமையாக உணர்ந்து கொண்டு இதனை ஒரு வழிமுறையாக்கி வாழ்ந்து காட்டி விட்டுச் சென்றார். வழிமுறையை வாழ்க்கையாக்கிக் கொண்டார். அந்த வாழ்க்கையை இன்று மதமாக்கி விட்டார்கள்.

விளக்க ஒன்றுமில்லை. விளக்கமே நீங்கள்தானென்றார். கடவுளென்று யாருமில்லை என்றார். இருப்பதெல்லாம் இயங்கிக் கொண்டிருக்கையில் அதன் அழகில் இயங்குதலை விவரிக்க ஏன் இந்தப் போராட்டம் என்று மனதை மண்டியிடச் செய்து வணக்கத்தை தனக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டார்.

கேள்விகளைப் பற்றி புத்தருக்கு கவலைகள் இல்லை ஏனென்றால் பதில் என்ற பொய் அவரிடம் இல்லை. அறிவின் நிலையில் மனிதர்களுக்கு வாழ்க்கையின் சூழலை விளங்க வைக்க போட்டிப் போட்டுக் கொண்டு ஒவ்வொரு குருமார்களும் உருவாக்கி வைத்த பால பாடங்களை இன்று மனிதர்கள் இறக்கும் வரை சுமந்து கொண்டிருக்கிறார்கள். அதை விட்டு வெளியே வரவே இல்லை.

இந்து என்று மதமில்லை. சனாதான தருமம் என்ற வார்த்தையிலேயே இது ஒரு விதமான அற நெறி. அறி நெறி என்றுதான் அர்த்தம். இதை அறி, தெளி. மெட்டிரியலாய் சொல்லப்பட்ட விடயங்கள் உனக்கு விளக்கம் கொடுக்கத்தான் அதைப் பிடித்து தொங்கிக் கொண்டிராதே. யார் சொன்னது இந்தியாவில் மதம் இருந்தது என்று...பாரத தேசத்தில் மதமே கிடையாது. இப்போது மதம் என்று பேசிக் கொண்டிருப்பது எல்லாமே மிகப்பெரிய சூழ்ச்சிகள் அல்லது மனித மனதினை நெறிப்படுத்த இடப்பட்ட திட்டங்கள்.

ஆமாம் யானையை கட்டுப் படுத்த அதன் காலில் சங்கிலையை இட்டு கட்டி வைப்பார்கள். அதுவும் சங்கிலியை இழுத்து இழுத்து அது தூணோடு பிணைக்கப்பட்டு இருக்கிறது என்ற எண்ணத்தை உள்வாங்கிக் கொள்ளும் ஒரு கட்டத்தில் அது காலை இழுப்பது வீண் என்று மனதில் திடமாய் எடுத்துக் கொண்டு காலை இழுத்து அதை அறுக்கும் முயற்சியை விட்டு விடுகிறது.

வெகு நாட்கள் கழித்து தூணோடு பிணைக்காமல் வெறும் காலில் மட்டும் சங்கிலியைச் சுற்றி வைத்து விட யானையால் நகர முடிந்தும் அது நகர்வதில்லை. காரணம் அதன் மனதில் தான் பிணைக்கப்பட்டு இருக்கிறோம் என்று பதிந்துள்ள எண்ணம்.

மதம் நமது மனமென்னும் தூணில் கட்டியிருக்கும் சங்கிலியைப் போன்றது........பக்குவப்படாத மனதிற்கு அது தூணில் பிணைக்கப்பட்ட சங்கிலிதான். பக்குவப்பட்ட பின்பு சங்கிலியின் நினைவில் நாம் நகர்வதே கிடையாது. இப்படியான் சடங்குகளில் அகப்பட்டுக் கொண்டுதான் நாம் புத்தரையும் போதி சத்துவரையும், போதி தர்மரையும் இழந்து இருக்கிறோம்.

இயற்கையின் கிசு கிசுப்பினையும், மலைகளின் நீண்ட மெளனத்தையும் நாம் கவனிப்பதே இல்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் வெற்று எழுத்துக் குப்பிகளைத்தான் உங்கள் முன் இறைத்து வைத்திருக்கிறேன். பகிர முயன்று நான் படித்துக் கொள்கிறேன், பகிர்வதைப் போல நடித்துக் கொள்கிறேன்.

போதி தர்மரைப் பற்றி போதி தர்மரின் மனோநிலையிலேயே அவரின் பார்வைகள் பேசுவதைப் போல எழுத ஒரு சிறு எண்ணம் கிளைத்துள்ளது. எல்லாம் வல்ல ஏக இறை அதற்கு உதவும்....ம்ம்ம்ம்ம் வேறென்ன...

மழை வரும் வரை ....
காத்திருக்க வேண்டியதுதான்
ஒரு வானம் பார்த்த....
விவசாயி போல...!


தேவா. S





Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த