Skip to main content

தனுஷின் கொலை வெறி...!

















பாட்டன் முப்பாட்டன்னு எத்தனையோ காலத்துக்கு முன்னாடி எல்லாம் எப்டி, எப்டியோ எழுதி வச்சுட்டுப் போன இலக்கியங்களும், செய்யுளும் குவிஞ்சு கிடக்குற ஒரு இனம். 54,000 வருசத்துக்கு முன்னாடி இருந்தே முத்தமிழ வச்சுகிட்டு கோலேச்சிக்கிட்டு இருக்குற ஒரு தேசிய இனம், சுத்தி சுத்தி போர் தொடுத்து எல்லா நாட்டையும் வென்று நாங்க தமிழங்கடான்னு சொல்லிட்டு வந்த ஒரு வீர மரபு...

கம்பனையும், இளங்கோவடிகளையும், வள்ளுவனையும், வச்சுகிட்டு நெஞ்சு நிமித்திகிட்டு திரிஞ்ச மக்க இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்காங்கன்னு கேக்குறீங்களா...?

வொய் திஸ் கொல வெறி..... கொல வெறிடின்னு பாட்டு பாடிகிட்டு சந்தோசமா தன் தாய்மொழிய கொன்னுகிட்டு இருக்காங்க. நவீனம், மாற்றம், மண்ணாங்கட்டி எல்லாம் எங்க வந்து விடியும் தெரியுங்களா தமிழனுக்கு அது அவன் பேசுற மொழியிலதான் வந்து விடியும். ஒரு பாட்டுன்ற விதத்துல இசையும் ராகமும் சரிதான்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம், அதுவும் அந்த இசை கூட தமிழகத்து டப்பாங்குத்து இசைய ஒட்டியே வர்றதால, ஆனா வரிகள்....?

இது ஒரு உதாரணம் மட்டும்தான் இது மாதிரி ஓராயிரம் பாட்டு இருக்குது தமிழனோட தலைவிதிய நிர்ணயிச்சுக்கிட....! ஒரு பக்கம் ஏழாம் அறிவு படத்தை பாத்துபுட்டு நிஞ்ச நிமித்திகிட்டு நாங்க எல்லாம் யாரு தெரியும்ல....உலகத்துக்கே குங்பூ சொல்லிக் கொடுத்த தமிழங்கன்னு வீராப்பா சொல்லிக்கிறாய்ங்க...

இன்னொரு பக்கம் இந்த வொய் திஸ் கொல வெறி...கொல வெறிடின்னு ஒரு நாய் கடிச்சு இழுத்துட்டுப் போய் பாதியில போட்ட தேங்காமட்டை மாதிரி ஒரு பாட்டுக்கு வரிகள எழுதி கேக்குற மனுசன் இசைய ரசிக்கிறானா இல்லை வரிகள ரசிக்கிறானான்னே தெரியாம, தெருத் தெருவா இந்தப் பாட்டை பாட வச்ச பாடல் குழுவினர்களுக்குத் தெரியாது நாம ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஆரம்பிச்சு வச்சு இருக்கோம்னு....

நல்ல தமிழ்ல அழகான மெட்டுப் போட்டு பாட்டு எழுதினா மருவாதை கொறஞ்சு போயிடுமோ என்னமோ தெரியலை. ஏய்யா இப்புடி செஞ்சீருன்னு தனுஷ் அண்ணன் கிட்டயும் அவுங்க சக தர்மினிகிட்டயும் கேட்டம்னா அவுங்க பளீச்சுன்னு சொல்லுவாங்க ஏண்ணே இப்புடி எழுதுனாத்தேன் பிரபலம் ஆகும் அதேன் எழுதி பாடுனோம்னு ..! நெசம்தானே தெருவுக்குத் தெரு, இந்த பாட்டு பிரபலம் அடைஞ்சது மட்டும் இல்லாம வட இந்தியாவையும் ஒரு கலக்கு கலக்கிக்கிட்டு இருக்குன்னு நேத்திக்கு தொலைகாட்சியில சொல்லுறாங்க...

இந்தப் பாட்டை பகிர்ந்துக்கிற, பாராட்டுற அல்லது மீண்டும், மீண்டும் பாடணும்னு நினைக்கிற அம்புட்டு பேருக்கும் தெரியுமா நம்ம தாய்மொழிக்கு எவ்வளவு பெரிய அவமானத்தை இந்தபாட்டுக்கள் எல்லாம் செஞ்சுகிட்டு இருக்குன்னு...!

தமிழ் நாட்ல நீங்க படம் வெளியிடப் போறீங்க, தமிழர்கள் படம் பார்க்கப் போறாங்க அப்புறம் எதுக்கு இந்த கொலைவெறி பாடலுங்க?

ஏற்கெனவே ஆங்கில மோகம் கொடிகட்டிப் பறக்கிற ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவங்க நாமன்னு உலகத்துக்கே தெரியும்...! சென்னை மாதிரி நகரங்கள்ள எல்லாம் வெளிநாட்டுக்காரங்க வருவாங்க இல்லை வேறு சுற்றுலாத் தளங்களுக்கு வெளிநாட்டுக்காரங்க வருவாங்க அதனால விளம்பரப் பலகைகள் எல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வச்சுக்கிடுறாங்கன்றதுல ஒரு அர்த்தம் இருக்கு....

ஆனா சின்ன சின்ன கிராமங்கள்ள இருக்குற கடைகள்ள கூட கூல்ட்ரிங்க்ஸ் கிடைக்கும்னு தமிழ்ல்ல எழுதி வச்சு இருக்கறது ஆங்கில மோகத்துனாலதானங்க? சமீபத்துல ஒரு நண்பர் என்கிட்ட சொன்னார் நீங்க பேசும் போது அதிகம் ஆங்கிலம் கலந்து கலந்து பேசுறீங்க, வேலையிடத்துல அதிகமா ஆங்கிலம் பேசுறதால அந்தப் பழக்கம் வருது ஆனா தமிழங்க கிட்ட பேசும் போது அப்புடி பேசுறது தப்புன்னு செருப்பால அடிச்ச மாதிரி சொன்னாரு...

ஆங்கிலத்துல முழுசா யாருகிட்ட பேசணுமோ அவுங்க கிட்ட பேசுங்க ரெண்டு தமிழங்க சேந்து ஆங்கிலத்துல பேசிக்கிற மாதிரி ஒரு அயோக்கியத்தனம் எதுவும் கிடையாது...! பழக்கம்ங்க ஐயான்னு அப்புடீன்னு நீங்க சொல்ற மன்னிப்பை ஏத்துக்க முடியாது, பழக்கமா இருந்தாலும் தவறை கஷ்டப்பட்டுதான் நீங்க திருத்திக்கணும்னு..

கொஞ்சம் கொஞ்சமா என்னோட மூளைக்கு அந்த உண்மை உரைக்க ஆரம்பிச்சுது. தமிழ்ல்ல பேசுறதுன்னா தூய சங்ககால தமிழ்ல பேசறதுன்னு ரொம்ப பேரு நினைச்சுகிட்டு பாதி ஆங்கிலம், பாதி தமிழ் பேசுறது ஒரு கலாச்சாரமா கொண்டு போய்கிட்டு இருக்காங்க ஆனா நம்ம பேச்சுத் தமிழ்லயே ஆங்கலத்தை கலக்காம பேசவும், எழுதவும் முடியும்ன்றத வசதியா மறந்து போய்டுறோம். அப்புடி நாம செய்றது கஷ்டமா இருந்துச்சுனாலும் அதை நாம் செஞ்சுதான் ஆகணும்....

ஏன்னு கேட்டீங்கன்னா ஒரு மொழி அழிஞ்சு போறது இந்த மாதிரியான கலப்பட பேச்சு வழக்குகளாலதான், மெல்ல மெல்ல வேற்று மொழி முழுதுமா நம்ம மொழிய ஆக்கிரமிச்சு அது பற்றின தடயங்களே இல்லாத அளவுக்கு ஆக்கிடும். பல ஆபத்துக்கள் நம்ம மொழிக்கு பல விதத்துல வந்துகிட்டே இருக்கு. இப்ப கூட சிறு வியாபரிகள் செய்யும் தொழில்களை எல்லா வெளிநாட்டு நிறுவனங்களும் நடத்தலாம்னு ஒரு ஆபத்தான அறிவிப்பை இந்திய அரசு தெரிவிச்சு இருக்கு (ஏன் ஆபத்துன்னு வேற கட்டுரையில பேசலாம்). அப்படி வரப்போற ஆபத்துல பெரிய ஆபத்து மொழிக்கும் கலாச்சரத்துக்கும் வரப்போற ஆபத்துதான்...

ஏற்கெனவே நமக்குத் தெரியாமலேயே ஒராயிரம் சீர்கேடுகளை நம்ம மொழிக்கு நாம செஞ்சுகிட்டு இருக்கையில, மக்கள அதிகமா பாதிக்கிற ஊடகங்கள் குறிப்பா இந்த சினிமாத்துறை அதாவது தமிழ் மொழியில படத் தலைப்பு வச்சா வரி விலக்கு தருவாங்கன்னு சொல்லிட்டு தமிழ்ல பேரு வச்சு பிரயோசனப்பட்டுகிட்டு இப்ப வரி விலக்கு இல்லைன்னு சொன்ன உடனே ஆங்கிலத்திலேயே பேரு வைச்சுகிட்டு இருக்காங்களே அந்த சினிமாத்துறை துரைமாருகதான்....

எல்லாத்தையும் வெளங்கிக்கிட்டு, இந்த மாதிரி வொய் திஸ் கொலை வெறி மாதிரி பாட்டுக்களைப் போட்டு தமிழ் மொழிய கொல்லாம இருந்தாச் சரிதான்...

என்னவோ போங்க நான் சொல்றத சொல்லிப்புட்டேன்....

மாடு வந்துடுச்சு கட்டுனா கட்டுங்க கட்டாட்டி போங்க....!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா....!

தேவா. S

பின்குறிப்பு: இம்புட்டு பேசுற உன் வலைப்பூ பேரே ஆங்கிலத்துல இருக்குன்னு நிறைய பேரு கேட்டுப்புட்டாங்க சாமியோவ்...! அறியாத பருவத்துல செஞ்சுபுட்டேன்.. சீக்கிரமே அதையும் மாத்திடுவோம்...!

Comments

அண்ணே .....இந்த விசயத்தில் " இங்கிலீஷ் காரன் "சத்திய ராஜ் காமெடி தான் ஞாபகத்துக்கு வருது :))

சரி இதை எல்லாம் இங்கிலீஷ் காரன் கண்டுபிடிச்ச கம்ப்யூட்டர் ல இங்கிலீஷ் காரன் operating சிஸ்டம் துள்ள....இங்கிலீஷ் காரன் ஆரம்பிச்ச ப்ளாக்ல,தூபாய்ல இருந்து ஏன் சொல்லிட்டு இருக்கறீங்க :))

50 வருசத்துக்கு முன்னாடி யூத் யா இருந்தவங்க கோவணம் கட்டுனாங்க.... இப்போ யூத் யா இருக்கரவங்க ஜீன்ஸ் போடறாங்க....எல்லாமே மாறி விட்டதே-னே :)
dheva said…
கிருஷ்ணா @ எல்லாம் சரிதாண்னே...

நம்ம மொழிய நாமதானே அண்ணே பாத்துகிடணும்..! ஒரு காலத்துல தமிழ்னு ஒரு மொழி இருந்துச்சுன்னு சொல்லிகிடுற மாதிரி ஆகிடாம இருந்தா சரிதான். அதோட எத்தனை மொழி வேணா கத்துக்கோங்க ஆனாஅ ரெண்டு தமிழர்கள் தமிழ்ல்ல பேசிக்குங்கன்னு சொல்றதுல தப்பே இல்லங்கறது என்னோட கருத்து!

கருத்துக்கு நன்றிகள் அண்ணா!
நல்லா சொல்லி இருக்கீங்க அந்த பாட்டை கேட்டாலே கொலை வெறி தான் வருது, பாடினவன் எழுதினவன் எல்லாரையும் கல்லால் எறியனும் போல இருக்கு.................
ஹேமா said…
தேவா...நாங்கதான் திட்றோம்.ஆனா அந்தப்பாட்டில என்ன இருக்கோ தெரில.பாட்டு உச்சத்தில உலாவுது !
Ungalranga said…
வெறும் மொழிக்காக இப்படி சச்சரவு கிளப்புறது சரியா படலை..ஒரு காலத்துல மனிதர்களிடையே தொடர்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவியே மொழி..

நம்ம மனிதமனமே இப்படித்தானே.. கருவிகளை கொண்டாடுறதும், மனிதர்களை மண்ணில் சாய்க்கிறதும் நம்ம இயல்புதானே...!!
கொலைவெறி என்ற வார்த்தை தமிழ் வார்த்தை தானே...???

கொலைவெறி ன என்னனு உலகம் முழுவதும் அர்த்தம் தேட வைச்ச பாடல் இது... அதை எல்லாம் மறந்து விடுறோம்

தமிழ் தமிழ் சொல்ற எல்லாம்.. அவங்க பிள்ளையை தமிழ் வழி கல்வியில் சேர்பதில்லை..

தமிழ் தமிழ் சொல்ற எல்லாம் வேட்டி கட்டுவதில்லை...

இப்படி வரும் பாடல்களால் தமிழ் அழிந்து விடும் என்று சொல்வதை விட அனைவரும் தங்கள் பிள்ளைக்கு தமிழ் கற்று கொடுத்தால் போதும்.. தமிழ் நன்றாக இருக்கும்...

தமிழ் தெரிந்தால் தமிழ் நாட்டில் மட்டும் தான் வேலை செய்ய முடியும்.. தமிழை மட்டும் வைத்து ஒன்றும் செய்து விட முடியாது...

நீங்க தமிழ் MA படம் பாருங்க :)))

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த