Skip to main content

கற்பூரக் கனவுகள்...!



வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு ஆள் அரவமற்ற சாலையாய் கிடக்கிறது மனது. காலத்தின் நகர்வுகள் திணிக்கும் மனோநிலைகள் மறுக்க முடியாதவை. இயல்புகளைக் ஆக்கிரமித்துக் கொள்ளும் சூழல்களை எல்லாம் மெளனமாய் வேடிக்கைப் பார்க்கிறது உள்ளுக்குள் எப்போதும் விழித்துக் கிடக்கும் ஒரு நெருப்பு.

எப்போதும் பராக்குப் பார்த்துக் கொண்டு ஏதோ ஒன்று எழுதக் கிடைக்கும் அல்லது எழுதவேண்டும் என்ற மனோநிலைக்கு ஒரு மிகப்பெரிய முற்றுப் புள்ளி வைத்ததோடு மனிதர்களோடு இயங்கி மனித மனோநிலைகள் சாராமல்,  நிர்ப்பந்தங்கள் அகன்ற ஒரு வெளியில் வந்து விழுந்து கிடக்கிறேன் என்பது ஒரு விதமான சந்துஷ்டியைக் கொடுக்கிறது.

சமூகம் எப்போதும் எதிராளியை அவனின் போக்கிலேயே ரசித்தது  கிடையாது. அது எப்போதும் தனது தேவையை முன்னிறுத்தியே தனது தொடர்புகளை விஸ்தரித்துப் பார்க்கிறது. ஒவ்வொருவரும் தன்னை மையப்படுத்தி வாழும் வாழ்க்கையில், மனமற்று மனதின் மையப்புள்ளியை உடைத்துவிட்டு பரந்து வாழும் ஒரு நிலை உண்மையில் வரம்தான் என்றாலும் இந்த சமூகத்தோடு சேர்ந்து நகரும் போது அது சாபமாகிவிடுகிறது.

ஆசைகள் எல்லாம் தன்னின் திருப்தியை நோக்கியதாய் இருக்க வேண்டும் என்று எவரும் நினைப்பதில்லை. தான் எந்த ஒரு நிலையில் இருந்தாலும் இந்த சமூகம் தன்னை மதிக்க வேண்டும், தன்னைப் போல மிக்காரும் ஒப்பாரும் இல்லை என்று சக மனிதன் போற்ற வேண்டும் என்பதற்காகவே மிகைப்பட்ட மனிதர்கள் தங்களின் இலக்கினை தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

இலக்குகளின்றி பயணிக்கும் அல்லது வாழ்க்கையின் சாரத்தை விளங்கி தன்னை உணர்ந்து நகரும் எவனொருவனும் இந்த சமூகத்தோடு சேர்ந்து வாழ முடியாதவனாகிப் போகிறான். இது வாழ்க்கை, இங்கே இப்படித்தான் நகரவேண்டும் என்ற பொய் வேடங்களைப் போட முடியாமல் சத்தியத்தின் சுவையை உணர்ந்தவனாய் அவன் தனித்து இயங்கவே விருப்பங்கள் கொள்கிறான்.

மனிதர்களின் குரூரங்களும், பகட்டான நடவடிக்கைகளும், விளம்பரமான வாழ்க்கை முறையும், சாதித்து விட்டேன் என்று அறைகூவல் விடும் கூக்குரல்களும், மாயை என்பதை அவன் தெளிவாகவே உணர்ந்திருக்கிறான். இதனாலேயே புற வாழ்க்கையில் பல சங்கடங்களை எதிர் கொள்ள வேண்டியும் இருக்கிறது.

சப்தமில்லா ஒரு மனதில் சிறு குண்டூசியின் அதிர்வு கூட அதிரடியானதுதான். வெண்மையான ஒரு தூய ஒரு பரப்பில் சிறு துறும்பு கூட மிக மிகப் பெரிய அழுக்குதான். இதனாலேயேதான் மனிதர்கள் இல்லா ஒரு இடம் நோக்கி ஒரு மனிதன் ஓட வேண்டியிருக்கிறது. இவன் வாழ்க்கையை மறுத்து ஓடுபவதாக சராசரியான மனோநிலைகள் கூறி அதை வாதிட்டு வெல்லவும் முடியும்..ஆனால் அவன் வாழ்க்கையை மறுத்து வாழ்க்கையை விட்டு விலகுவதில்லை.

மாறாக....

வாழ்க்கையை உணர்ந்தே அதை விட்டு விலகுகிறான். நிலையாமையைக் உணர்ந்தவன் நிலையான பொருள் எதுவென்று தன்னுள் கேட்டுக், கேட்டு அதன் விடையைத் தேடி மெல்ல எல்லாம் புறம் தள்ளி விட்டு நகர்கிறான். கூச்சல்களும், கிண்டல்களும், ஆணவப் பேச்சுக்களும் குழப்பமான மன அதிர்வுகளும் அவனுக்கு தேவையில்லாததாகிப் போகிறது.

ஒரு வெள்ளைச் சுவரின் அடுத்தப் பக்கத்தில் ஏறிப்பார்க்க ஆசைப்பட்டு பலர் பகிரதப் பிரயத்தனம் செய்கிறார்கள். அப்படி ஏற முயலும் அத்தனை பேருக்கும் சுவற்றுக்கு அந்தப் பக்கம் ஏதோ ஒன்று இருக்கும் என்கிற ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்யும். தான் மட்டுமே முந்திப் பார்க்க வேண்டும் என்று தன்னைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவரையும் தள்ளி விட்டு, அடித்து மோதி முண்டிக் கொண்டு, போட்டிகள் போட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் முயன்று கொண்டிருக்கையில்.....

அந்தப்பக்கம் என்ன இருக்கும் என்று உறுதியாய் தெரிந்த ஒருவன் என்ன செய்வான்...? இந்தப் போட்டியில் ஈடுபடுவானா? சக மனிதரை திட்டுவானா...?தான் பெரிய வலுவுள்ளவன் என்று கொக்கரிப்பானா? தன் ஆணவத்தை வெளிக்காட்டுவானா? 

அப்படி எல்லாம் செய்ய மாட்டான் தானே...?

ஏனென்றால் மறுபக்கம் ஒன்றுமில்லை என்று அவனுக்குத் தெரியும். அப்படி தெரிந்ததாலேயே அவன் மெளனித்து நிற்பான். முயற்சிகள் செய்தால் அந்தச் சுவரை கடத்தல் கடினம் என்று தெரிந்து முயற்சிகளை விட்டு, விட்டு அவன் தனக்கு கிடைத்த இடத்தில் தனக்கான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான். ஏனென்றால் முயற்சிகள் அற்றுப் போகும் போது அந்த சுவருக்கு அப்பாலிருக்கும் வெறுமைக்கு  தன்னாலேயே போய்விடுவோம் என்று அவனுக்குத் தெரியும்.

கிடைத்திருக்கும் வாழ்க்கையை அன்பாய், அமைதியாய் வாழத் தெரியாமல் மிருகமாய் நகரும் சக மானுடக் கூட்டத்தைப் பார்த்து அவர்களுக்காய் இவன் பிரார்த்திக்கிறான். அவர்கள் மனம் அமைதி பெற இவன் தியானிக்கிறான். பொருள் சேர்த்து, புகழ் சேர்த்து ஒரு மனிதன் இவ்வுலகில் நிம்மதியடைய முடியாது என்பதை அவன் திண்ணமாய் உணர்ந்திருக்கிறான்.

உலகில் மனிதன் தேடுவது நிம்மதி. கடவுளாய், மதமாய், சாதியாய், தத்துவமாய் பொருளாய், காதலாய், காமமாய், புகழாய், சண்டையாய், ஆக்கிரமிப்பாய், சமூக சேவையாய் இவ்வுலகின் ஒவ்வொன்றையும் மனிதர்கள் நுகர்ந்து, நுகர்ந்து கடைசியில் அவர்கள் சென்று அடைய வேண்டிய இடம் நிம்மதியான ஒரு வாழ்க்கை. ஆனால் பாவம் யாருக்குமே தெரியாது எதையும் சேர்க்க, சேர்க்க நமக்கு நிம்மதி கிடைக்காது என்று... 

ஆனால் ஒவ்வொன்றாய் விட, விடத்தான் நமக்கு அந்த நிம்மதி கிடைக்குமென்று....எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்த உலகில் நிம்மதியில்லாத மனிதர்களாய் நான் அறிவது மிகப்பெரிய பணக்காரர்களையும், புகழ் பெற்றதாய் தங்களை எண்ணிக் கொண்டு கனத்த தலையோடு நடமாடும் மனிதர்களையும்தான். இவர்கள் எல்லோரும் தங்களை யாரோ என்று மனதால் கற்பித்துக் கொண்டே காலெமெல்லாம் வாழ்கிறார்கள்...

மரணிக்கும் தருவாயில் ஒரு தெரு நாயும் தானும் ஒன்றுதான் என்று உணரும் போது அதிர்ந்தே போகிறார்கள்.

என்னைச் சுற்றியும் ஒரு ஓட்டமும், போட்டியும் எப்போதும் சூழ்ந்து கொள்கின்றன அது வாழ்க்கையின் மறுக்கமுடியாத சூழ்ச்சி. இந்த சூழ்ச்சியை விட்டு நான் நகரவே விரும்புகிறேன். என்னைச் சுற்றிய இரைச்சல்களிடம் எல்லாம் கை கூப்பி மனமார வேண்டுகிறேன் என் அமைதிக்கு உதவுங்கள், நீங்களும் அமைதியாயிருங்கள். நாம் பெறுவதற்காக வரவில்லை கடப்பதற்காக வந்திருக்கிறோம்...

சத்தியமாக உங்களை வழிநடத்துகிறேன் என்று பணம் கேட்பவர்களை விட்டு நீங்கள் எப்போதும் விலகியே இருங்கள். ஏனென்றால் உங்கள் வழியை யாரும் காட்டவே முடியாது. பிரபஞ்ச சக்தியின் அற்புதத்தில் ஒவ்வொரு படைப்பும், ஒவ்வொரு மனிதனும் ஒரு வகை, ஒவ்வொரு சூழலும் ஒரு தினுசு, நீங்கள் உங்களை உணர்ந்தால் தான் உங்களின் பாதை உங்களுக்குத் தெரியும்....

மேலும் இங்கே நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது. நன்மை, தீமை என்று எதுவும் கிடையாது, உங்கள் கடவுள் என் கடவுள் என்று எதுவும் கிடையாது...

இருப்பதெல்லாம் வாழ்க்கை என்னும் ஒன்றே... அந்த வாழ்க்கையை எவ்வளவு திருப்தியாய், மனமகிழ்ச்சியாய் வாழ்ந்து நகர்கிறோம் என்பதே மையப் பொருள்...! 

எங்கோ நகர்ந்து ஏதோ ஒரு இடத்தில் தற்காலிகமாய் நான் இப்போது நிலைத்திருக்கிறேன். இந்த நிலையில் எந்த நிர்ப்பந்தங்களும் இல்லாமல் இருக்கிறேன். வாழ்க்கை கொடுத்த சூடு இன்னும் ஆறவில்லை, மனிதர்கள் கொடுத்த வடு இன்னும் இரணமாயிருக்கிறது.....

காயங்கள் ஆறும் வரை, கடந்தகால நினைவுகள் மறையும் வரை....ஒரு கற்பூரமாய் நான் எரிந்துதான் ஆகவேண்டும்...

ஆமாம் எரிந்தால்தான்.....நான் கரைந்து மறைய முடியும்....!


தேவா. S


Comments

Kumaran said…
தங்களது வலை உலகுக்கு இப்பொழுதுதான் வருகிறேன் என நினைக்கிறேன்..அருமையான பதிவு..தங்களது வாசகனாக ஆனமைக்கு மகிழ்கிறேன்.நன்றிகள்.
சைக்கோ திரை விமர்சனம்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த