Skip to main content

மாயா...மாயா....எல்லாம் மாயா!



இல்லாத இடத்திலிருந்து இருப்பவராய் நம்மை ஜனித்துக் கொடுத்தது ஒரு சூனியம். சூனியத்தின் பிள்ளைகள் சூட்சுமத்திலிருந்து பிழிந்தெடுத்த கனவின் வண்ணமய காட்சிகளாகி கை கால்கள் முளைத்து ஐம்புலனென்னும் பொறிகள் கொண்டு பெற்ற அனுபவத்தை மனமாக்கி, புத்தியில் நினைவுகளாய் தவழ்ந்து கொண்டு படைக்கிதிங்கு ஓராயிரம் பொய்மைகளை....

அறிந்திராத கடவுளை அறிந்த பொழுதில் பட்டுப் போய்விடும் அவயங்களை ஏந்திக் கொண்டு அங்கும் இங்கும் வழிபாடுக்காய் கட்டிடங்களையும், கருத்துக்களுக்காய் வேதங்களையும் சுமந்து கொண்டு மதநாடகம் நடத்தும் பித்துக் கூட்டங்கள் பெற்றுப் போட்ட பிள்ளைகள் நிரம்பிய பூமியாய்ப் போனது.....இந்த சுழல் பந்து.

ஆசையின் வேர்கள் நீண்டு கொண்டே இருக்க அதிகாரமென்னும் கொம்புகள் முளைத்து அங்கும் இங்கும் மிருக சாயலில் அலையும் வேடிக்கை மனிதர்கள் போதும் போதுமென்றளவிற்கு பொருள் ஈட்டி பின்னொருநாள் தீக்கிரையாகிப் போகின்றனர் இல்லையேல்...மண்ணில் மட்கிப் புழுவாகி நெளிந்து கொண்டிருக்கின்றனர்....

மறுமையில் சுகமனுபவிக்கும் ஆசையில் மதங்களுக்குள் புகுந்து வேடமிட்டுக் கொண்டு நல்லவர் வேடம் போடும் வேகத்தில் எத்தனை எத்தனை இயல்புகளை உடைத்துப் போடுகின்றனர் இவர்கள்....! இறுமாப்பில் பேசித் திரியும் மானுடர்கள் சாலை கடக்கையில் சட்டென்று ஒரு கன ஊர்தி அவர்கள் மீதேறி இறங்கினால் என்னவாகும்...?

யோசித்துப் பார்க்க நேரமில்லாமல்....தலைகளில் எப்போதும் அரசியல் விதண்டாவாதங்களையும், மதப்பிடிப்புக்களையும், நான் அறிந்தேன், நான் மட்டுமே அறிந்தேன் என்ற இறுமாப்பில் அலையும் மூட கள்ள படைப்பாளிகளையும் என்ன செய்யும் இந்த வாழ்க்கை....?

கழுத்தெலும்புகளை உடைத்து ஒருவேளை பாடம் கொடுக்கலாம், இடுப்பிலிருக்கும் சக்தியினை உறிஞ்சி நிற்க முடியாமலொரு பாடம்கொடுத்து நீ ஒன்றுமில்லை என்றும் சொல்லிக் கொடுக்கலாம், பெரும் காய்ச்சலில் வாய் கசக்க வீட்டு மூலையில் வாய் கோணி படுக்கவைத்து....பல்லிளித்துக் கொண்டே பாடங்கள் சொல்லலாம்...யார் கண்டது..? இறுமாப்பினை அறுத்தெறிய வாழ்க்கை யாதொரு வேடமிட்டும் வரலாம்.....

பகுத்தறிவு புகுத்திக் கொடுத்த விஞ்ஞானத்தின் வெருண்ட ஓட்டத்தில் சமைந்து கிடக்கும் நவீன ஊடகங்களில் ஊர்ந்து செல்லும் மானிடக்கூட்டத்தில் பலர் நாயைப் போலவே திரிகின்றனர். எனக்கு கிடைத்த உருவம் நானா படைத்தது? எனக்கு கிடைத்திருக்கும் சிந்தனைகள் என்ன நான் தனித்தமர்ந்ததால் கிடைத்ததா? எங்கிருந்து வருகிறது மட மானுடர்களுக்கு தான் அழகென்ற மமதையும், தான் அறிவாளி என்ற புத்திக்கோளாறும்....! சுய தம்பட்ட மைதானமாய் போயிருக்கும் சமகால சமூக இணைப்பு வெளிகளில் ஊடுருவிச் செல்லவே கூசித்தான் போகிறது நியாயவான்களின் உடல்கள்...

சுயதம்பட்ட தேற்றத்திற்கா கருத்துப் பகிர்தல்....? வழிகாட்டுபவனுக்கு எப்படி வரலாம் இறுமாப்பு...? வழிகாட்டுகிறேன் என்று கூறுபவன் திருப்தி என்னும் நிறைவை அல்லவா கொள்ள வேண்டும். இருக்கும் வழியை காட்டுவதற்கு பெருமைகள் பேசும் பித்தனை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்.....? அல்ப ஜந்துவாகத்தானே....? அப்படியேதான் கருத்துப் பகிர்தலை அகங்காரமாய் எடுத்தியம்பும் வீணர்கள் கூறுவதை எல்லாம் காலம் பல முறை பல சூழல்களில் ஏற்கனவே பகிர்ந்துதானே சென்றிருக்கிறது....

எங்கிருந்து எடுக்கிறான் ஒரு திறமை சாலி தனக்கான திறனை...? இந்த பிரபஞ்சத்தின் அறிவிக்கப்படாத அல்லது அறிந்திடாத மூலைகளிலும் கூட விரவிக் கிடக்கும் பேரறிவுகளில் இருந்துதானே...? பகுத்தறிவும், அஞ்ஞானமும் விஞ்ஞானமும் புதிதாய் உருவானது அல்ல....அது எப்போதும் இங்கே இருப்பது. இவை எல்லாம் ஒன்று கூடிய பிரமாண்டத்தை புரிந்து கொள்கையில், எதை பகிர்ந்தாலும் அதை நான் என்னும் கட்டுக்குள் இருந்து பகிர்ந்தேன் என்ற் அபத்த அறிவு அழிந்தேதான் போகிறது.

வாழ்க்கை எப்போதும் இருப்பது. யாரோ எப்போதோ எழுதியதை நான் இன்று இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். யாரோ செய்த அரசியலை யாரோ இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். எவனோ செய்த புரட்சியின் தாக்கத்திலேதானே இந்தப் பூமியில் ஓராயிரம் புரட்சிகள் வெடித்தெழுந்தன...? எல்லா உணர்வுகளின் மூலமும்....ஜனித்த இடமென்று ஒன்று இருக்கும்தானே....? அந்த பெரு உணர்விலிருந்து வெடித்து சிதறிய பிச்சைதானே நீங்களும் நானும் பகிரும், பழகும், செயற்படுத்தும் எல்லா செயல்களும்....

மாயையின் பிள்ளைகளே.......!!!! அழிந்து மட்கப்போகும் ஒன்றுமில்லாததின் சக்கரவர்த்திகளே...!!!! சக்தியை காலம் உறிஞ்சிக் கொண்டபின் பலமின்றி கண்ணீர் வழிய கடந்த காலத்தில் செய்த தவறுகளை எண்ணி கதறப் போகும் பொய்களே....

இறுமாப்புக்களை அழித்தொழியுங்கள்...! இல்லாததிலிருந்து நாம் வந்திருக்கிறோம்.  நாம் யாருமில்லை என்று உணருங்கள். வாழ்க்கை மாயை....! இந்த மாயையிலொரு சண்டையும், வீண் ஜம்பமும் பொய் என்றுணருங்கள்....!

மாயா...! மாயா...! எல்லாம் மாயா..........சாயா...சாயா....எல்லாம் சாயா!

தேவா. சு


Comments

nice post nanba
come to my blog www.suncnn.blogspot.com
Anonymous said…
//நான் அறிந்தேன், நான் மட்டுமே அறிந்தேன் என்ற இறுமாப்பில் அலையும்//

ஒரு வேலை அப்படி எல்லாம் தான் அறிந்திருந்தால் 'தான்' என்று ஒன்றில்லை அதனால் அறிவது என்று ஏதுமில்லை என்பதையும் புரிந்திருக்க வேண்டுமே.
ஹேமா said…
தேவா...நான் கனதரம் உணர்ந்திருக்கிறேன்.வாழ்க்கையை ஆழ்ந்து யோசிச்சால் எல்லாமே வேணாம் என்று போகும்.எல்லாம் சும்மா,பொய் என்று தோன்றும்.அதையேதான் நீங்கள் மாயை என்று சொல்லியிருக்கிறீர்கள் !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த