Skip to main content

தமிழரின் தாகம்...தமிழீழத் தாயகம்..!



ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஆரம்பிக்கும் போதே நெஞ்சு பதை பதைப்பதை தவிர்க்க முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய பெரும் அவலத்தில் அழிந்த நம் உறவுகளின் அழுகைச் சத்தம் மானமுள்ள தமிழனின் காதுகளில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். அயோக்கித்தனமாய் உலக நாடுகளை ஒன்று சேர்த்துக் கொண்டு பிச்சை எடுத்து ஒரு இன அழிப்பை நடத்தி விட்டு விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என்று கொக்கரிக்கிறான் மானங்கெட்ட ராஜபக்சே...!

எத்தனை எத்தனை நிகழ்வுகள்.....2009 மே17, 18, 19 க்குப் பிறகு. பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்ற வாதங்களில் எல்லாம் இப்போது யாரும் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. நம்பிக்கை இருப்பவர்களுக்கு அவர் இருக்கும் கடவுளாகிப் போனர். அவர் இருக்கிறார், கண்டிப்பாய் வருவார் என்ற நம்பிக்கை இங்கே ஓராயிரம் பிரபாகரன்களை உருவாக்கிக்தான் கொண்டிருக்கிறது.

பிரபாகரனையும் அவர் கட்டியெழுப்பிய விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் நேசிக்க நீங்களும் நானும் தமிழனாய்த்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஒரு நல்ல மனிதனாய் இருந்தால் போதும். நேர்மையான, சுய சிந்தனை உடைய, காழ்ப்புணர்ச்சிகள் அற்ற, உணர்வுகள் கொண்ட ஒவ்வொரு மனிதனும் பிரபாகரன் என்னும் மாவீரனை தனது வழிகாட்டியாக, கடவுளாக பார்க்கத்தான் செய்வார்கள். 

தன் இனம் வாழ வேண்டும் என்று கருவி ஏந்தி போராடி தன் மக்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்து கடைசிவரை களத்தில் மக்களோடு மக்களாக நின்ற ஒரு பெருவீரன் மீண்டும் வரவேண்டும் என்று எண்ணுவதில் எந்த தவறும் இல்லை....அவர் இல்லை என்று சொல்பவர்களின் நாக்குகளை வெட்டிப் போடவேண்டும் என்று நமக்குத் தோன்றுவதும் இயல்புதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

எது எப்படி இருந்தாலும் நடந்து முடிந்த ஈழப்போர் நமக்கு பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. இந்திய இறையாண்மைக் கத்தியின் பதம் எப்படி இருக்கும் என்று அறிந்தோம், மனித நேயம் முக்கியம் என்று உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் அமைப்பு யுத்த சமயத்தில் எப்படி நடந்து கொண்டது என்றும் அறிந்தோம், இந்திய தேசம் முழுமைக்கும் இருந்த  மக்களும் மற்ற மாநில அரசியல்வாதிகளும் அண்டை தேசத்தில் ஒரு பெரு இன அழிப்பு நடந்த போது என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெளிவாய் உணர்ந்தோம்...

எல்லாவற்றுக்கும் மேலாக எம் தாய்த் தமிழகத்தின் மானமிகு தமிழினத்தின் தலைவர்களும், புரட்சித் தலைவிகளும் தமிழ் இரத்தம் ஈழத்தில் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்த போது யுத்தத்தை நிறுத்த என்ன மாதிரியான முயற்சிகளை எடுத்தார்கள் என்பதை நாம் அறிந்ததுதான்...வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமான விடயம். நயவஞ்சகமாய் தமிழர் நலம் என்பதை வெற்று அரசியலாய் கொண்டிருந்த, சுயநல அரசியல் செய்து சுகபோகங்களில் திளைத்துக் கிடந்த, ஜந்துக்களையா நாம் நமது தலைவர்களாக எண்ணிக் கொண்டு மாற்றி மாற்றி அரியணையில் ஏற்றினோம் என்று எண்ணிய போது அவமானம் பிடுங்கித்தான் தின்றது....!

ஈழத்தில் நடந்த அத்தனை கொடுமைகளையும் உலகெங்கும் இருக்கும் ஊடகங்களும், வலைப்பூக்களும், இணையதளங்களும் தெளிவாய் விளக்கி எழுதிக் கொண்டிருந்த போது தாய்த் தமிழகத்தில் மானாட மயிலாடவும், ஜாக்பாட்டும் பார்த்துக் கொண்டு தாய்த் தமிழன் தொடை தட்டி சிரித்துக் கொண்டிருந்தான். மிகச் சிலரே..........மிக மிகச் சிலரே மக்களிடம் ஈழப்பிரச்சினையை கொண்டு சேர்க்க முயன்ற போதும் அப்போதைய தமிழக அரசு அதை தனது அதிகாரத்தால் முடக்கிப் போட்டது, குரல்வளைகளை நெறித்துப் போட்டது குறிப்பாக தமிழகத்தில் எழுச்சி வந்து விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தது.

தமிழர்களுக்கு முகத்தில் அறைந்தாற்போல எதுவும் நடந்தாலே தவிர....பெரும்பாலும் எதுவும் உறைப்பதில்லை என்ற கூற்றினை உறுதி செய்யும் வண்ணம் முத்துக்குமார் என்னும் ஒரு விதை இந்த பூமியில் கருகி விழுந்த போதுதான் கண் விழித்து பார்த்து .......என்ன ஆச்சு...? ஏன்... தீக்குளிக்க வேண்டும் என்று நாம் கேட்கத் தொடங்கினோம். முத்துக் குமார் செத்துவிழுந்த போதும் இந்திய அரசுக்கு மாமா வேலை செய்த ஊடகங்கள் அதைக் கூட காட்சிப்படுத்தவில்லை.

முடிந்து விட்டது...! எல்லாமே முடிந்து விட்டது.....! இனி அதை பேசி பிரயோசனம் இல்லை நண்பர்களே...! அழுது அழுது கண்கள் சிவந்தது போதும்... இனி மனிதர்களை உற்று நோக்கி அவர்களின் கபட நாடகங்களை அறிந்து சரியான தலைமையை தமிழ் நாட்டில் தேர்ந்தெடுப்பதோடு, இந்திய மைய அரசிலும் வலுவாக அந்த கட்சியை வலிமைப் பெறச் செய்வதுமே  நாம் செய்ய வேண்டிய அரசியல். தமிழகத்தில் இனி தமிழர்களுக்கான ஒரு பாரிய அரசியலை செய்யாமல் எந்த ஒரு கட்சியும் இனி பிழைத்து எழ முடியாது என்பதை ஈழப்போர்தான் முடிவு செய்தது என்பதையும் நாம் உணர வேண்டும்.

ஓட்டுக் கேட்டு வரும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இனி தனித் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று பேசுவார்கள்...., நாங்கள் வெற்றி பெற்றால் தமிழர் நலம் பேணப்படும், ஈழத்தின் மக்களின் விடியலுக்கு தனித் தாயகம் பெறுவதற்கு நாங்கள் போராடுவோம் என்று கையேந்திப் பிச்சை கேட்பார்கள். ஆமாம்....ஈழம் மெளனமாய் அதை சாதித்து இருக்கிறது. பிரபாகரன் என்ன சாதித்தான் என்று கேட்கும் நயவஞ்சகர்களிடம் சொல்லுங்கள்...

ஈழம் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தாமல் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இனி பிழைத்தெழ முடியாது.....என்பதை உறுதி செய்தவன் பிரபாகரன் தான் என்று...! ஈழப்போரில் இரத்தம் குடித்த  கொலைகார காங்கிரஸ் கட்சி....திருடனுக்கு தேள் கொட்டியது போல நின்று கொண்டிருக்கிறது இப்போது..., தமிழகத்தின் தனது கூட்டணி சகாவான திமுகழகத்தின் தலைமை மீண்டும் டெஸோ என்னும் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை தூசு தட்டி எடுத்து இருக்கிறது....

கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா ஜெயித்திருக்க வேண்டியவரே அல்ல....என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும்....ஆனாலும் மிருகபலத்தோடு ஜெயித்தார் என்பதற்கு முழு முதற்காரணமாக ஈழப்பிரச்சினையில் திமுகழகம் நடந்து கொண்டதுதான் காரணம் என்பது திமுகழகத்தில் இருப்பவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஊழலை எல்லாம் யோசித்து தமிழன் எப்போதும் பெரிதாய் எடுத்துக் கொண்டதே இல்லை...அப்படி எடுத்துக் கொண்டிருந்தால் புரட்சிச் தலைவி இன்னும் முதல்வராய் புட்பால் மேட்ச் ஆகிக் கொண்டிருக்க முடியாது.....அவ்வளவு மெகா ஊழல்களையும் செய்தவர் அவர் என்பதோடு மட்டுமில்லாமல் இன்னமும் கோர்ட் படியேறிக்கொண்டும் இருக்கிறார்.

திமுகழக ஆட்சியில் நடந்தது என்று சுட்டிக்காட்டும் அத்தனை தவறுகளும் எப்போதும், இப்போதும் ஏன் இன்னும் சொல்லபோனால் இன்னும் அதிகமாகவே அதிமுக ஆட்சியில் நடந்து கொண்டுதானிருக்கிறது என்றாலும்....ஈழப் போர் நடந்து கொண்டிருந்த போது திமுக தலைமை நடந்து கொன்ட விதத்தை மனசாட்சியுள்ள எந்த தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்..காரணம் திமுகழகத்தின் மீதும் அதன் தலைமை மீதும் ஒவ்வொரு தமிழனும் வைத்திருந்த எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் பொய்த்துப் போனதுதான்.

கடந்த சட்ட மன்றத் தேர்தலில் ஈழம் மெளனமாய் தனது ஆளுமையைக் காட்டியது. இனி வரப்போகும் எல்லா தேர்தல்களிலும் ஈழம் தமிழகத்தில் விசுவரூபமெடுக்கும், ஈழம் என்னும் வேரூன்றி தமிழர் நலம் பற்றி பேசாத எவனொருவனும் இங்கே இனி அரசியல் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சியே தனித் தமிழ் ஈழத்தை ஆதரித்து பேசினாலும் ஆச்சர்யமில்லை....

2009 மே 17, 18, 19களில் நம் உறவுகள் வெறுமனே மரித்து மட்டும் போய் விடவில்லை, இதோ மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் உயிராய், உணர்வாய் நின்றாடிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தை அரசியலாக்கி ஓட்டுக்களாய் மாற்ற முயலும் நயவஞ்சகர்கள் யார் என்று இனி யாரும் சொல்லி நமக்குத் தெரிய வேண்டியதில்லை, நான்கு நாட்களில் போரை நிறுத்தினேன் என்று விளம்பரம் செய்தவர்களும் போர் என்றால் மனிதர்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று சொன்னவர்களும்....ஈழம்......ஈழம்.....ஈழம் என்று இனி விடாமல் முழங்கிக் கொண்டிருப்பார்கள்....! அப்படி முழஙினால்தான் அவர்கள் பிழைப்பு ஓடும்....!

கொலை பாதகங்கள் செய்த கொடும் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்த இலங்கையில் நாங்கள் தமிழர்கள் நெஞ்சு நிமிர வாழ வைப்போம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நமது கால்களை வந்து நக்குவார்கள்....நாம் ஏமாறக் கூடாது. 

"எங்கள் துப்பாக்கிக்களை நாங்கள் தற்காலிகமாக மெளனிக்கச் செய்கிறோம்.... "

என்று தமிழ் ஈழ தேசிய இராணுவமான விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவித்து விட்டு ...மொத்தமாய் மெளனித்து விட்டது என்று முட்டாள்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளை கொடி ஏந்தி சென்றவர்களை வதைத்துக் கொன்ற கொடூரத்தையும், வேதியல் கொத்தெறி குண்டுகளை வீசி எம்மக்களை பொசுக்கிப் போட்ட அவலத்தையும், கருகிக் கிடந்த பிள்ளைகளையும், காயம்பட்டு மருத்துவ உதவிக்காய் கெஞ்சிக் கொண்டிருக்கையில் மருத்துவமனையில் குண்டு போட்டு அழித்த மிருகச் செயல்களையும்....

நாம் மறந்து விடக் கூடாது. நம் பிள்ளைகளுக்கு எல்லாம் தமிழ் ஈழத்தில் நடந்த கொடுமைகளையும் அங்கே யார் யார் எப்படி வஞ்சித்தார்கள் என்பதையும், அநீதி எப்படி எல்லாம் ஆட்டிப்படைத்தது என்பதையும் நாம் ஊட்டி வளர்ப்பதோடு.....பிரபாகரன் என்னும் பெரும் வீரன் ஏன் துலக்கு ஏந்தினான்..? எப்படி எல்லாம் நம் இனத்தை நேசித்தான்..?  எவ்வளவு நுட்பமான மூளைக்கு சொந்தக்காரன் அவன், அவனது வீரம் எத்தகையது, பாசம் எத்தகையது..... என்பதை எல்லாம் உணர்வாய் நாம் அறிவித்தே வளர்க்க வேண்டும்.

காலத்தின் போக்கில் எல்லாம் மாறும்........அந்த மாற்றத்தில் நமது உணர்வுகளின் ஒட்டு மொத்த வீரியமும் ஒன்று கூடி நமக்குத் தாய்த் தமிழ் ஈழத்தைப் பெற்றெடுத்து கொடுக்கும் என்ற உறுதியோடு போரின் போது வீரமரணம் அடைந்த எம் இனத்திற்கு வீரவணக்கத்தையும் எமது அஞ்சலிகளையும் செலுத்தி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

தமிழரின் தாகம்....தமிழீழத் தாயகம்....!


தேவா. சு



Comments

அனைத்துத் தமிழர் காதிலும் ஓத வேண்டிய அருமையான பதிவு. நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இதை மறந்தால் அது எமக்குச் செய்யும் தூரோகமல்ல, எம் உயிர் தலைவருக்கு அவர் பின் அணிதிரண்டு எமக்காய் போராடி மடிந்த அந்த மாவீரருக்குச் செய்யும் தூரோகம். வருங்காலங்களிலாவது எமக்காய் வாழ எம் இனத்திற்காய் வாழ நினைப்பவர்களுக்காய் அவர்களின் கரங்களைப் பலப்படுத்துவோம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல.
தமிழரின் தாகம்....தமிழீழத் தாயகம்....!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல