Skip to main content

இசையோடு இசையாக...தொகுப்பு 7!



வாழ்க்கை எப்போதும் மிகப்பெரிய போர்க்களமாய் விரிந்து கிடக்கிறது. காதலென்னும்  வலுவான உணர்வும் எப்போதும் நெஞ்சின் ஓரத்தில் ஒரு எரிமலையாய் உள்ளுக்குள் உடன் குமுறிக் கொண்டுமிருக்கிறது. தினவெடுத்த தோள்களும், உன்மத்தம் கொண்ட புத்தியும் எப்போதும் எதிரிகளாய் சூழ்ந்து நிற்கும் சூழல்களை ஒரு கணமேனும் தாமதிக்காமல் வெட்டி விடும் வேகத்தில் வெறியேறிப் போய் கிடக்கிறது. 

ஏதேனும் ஒரு எதிர் கேள்வியை வாழ்க்கை கேட்டு முடிக்கும் முன்னால் அந்தக் கேள்வியைப் பெயர்த்தெடுத்து நொறுக்கி இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விட்டு மீண்டும் மனப்புரவியிலேறி நான் விரைந்து கொண்டிருக்கிறேன். நான் தோற்றுப் போவேன் என்று மிகையானவர்கள் தீர்மானித்து முடித்து என் உடலை இறந்து போன சடமாய் எண்ணி புதைப்பதா? எரிப்பதா என்று அவர்கள் பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கும் போதே நான் விசுவரூபமெடுத்து எழுகிறேன். ஒரு இடத்தில் விழுந்து வேறொரு இடத்தில் எழுந்து நிற்கும் கோழையல்ல நான் என்பதை அக்கணமே அறுதியிட்டு நான் எங்கே விழுந்தேனோ அங்கேயே பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறேன்....

வா..... வாழ்க்கையே ...வா...! வரிசையாக சூழல்களை என்னிடம் அனுப்பு. என்னை எள்ளி நகையாடிய மனிதர்களையும், நான் வேரறுந்து வீழ்ந்து விட்டேன் என்று எக்களித்த முரடர்களையும், நான் தாழ விழுந்து கிடந்த போது என் தேகத்தில் தத்தமது பாதங்களை அழுந்தப் பதிந்து நடந்து ஒரு அற்பனாய் என்னை மதித்த மனிதர்கள் கூட்டத்தையும் என்னிடம் இப்போது வரச் சொல்....

நான் சராசரி மனிதனா இல்லை மாவீரனா என்று காட்டுகிறேன்...! பெரும்பாலும் அவர்களோடு நான் போரிடப்போவதில்லை... என் கர்ஜ்னையே அவர்களின் சமாதிகளை தன்னிச்சையாக எழுப்பிக் கொடுக்கும்.

இனி விடியப்போகும் பகல்கள் எல்லாம் எனக்கானவை.... மலரப்போகும் இரவுகள் எல்லாம் எனக்கானவை...! ஆமாம்.....இது எனது முறை. மனிதர்களின் இகழ்ச்சிகளை எல்லாம் என் காலடியில் நான் இப்போது மிதித்து நிற்கிறேன், என்னை முகஸ்துதி செய்யக் காத்திருக்கும் கூட்டத்தின் குரல்வளைகளில் சரியாய் சொருகுவதற்காக என்னிடம் காத்திருக்கின்றன கூரான கத்திகள்....

வாழ்க்கையின் ஓட்டத்தில் ஏற்றமும் இறக்கமும் இயல்படா மூடர்களே....!!!சூழல்கள் எல்லாம் மனிதர்களை திடமாக்கும் காரணிகளடா நீசர்களே....!!!! புறம் பேசிப்  பேசி உங்கள் நாவுகள் எல்லாம் நீண்டு வளைந்து கிடக்கின்றன .. அடுத்தவர் பற்றிய சொரணை கெட்ட கதைகளில் சுகம் கொண்டவர்களின்   நீண்ட நாவுகள் எல்லாம் சர்வ நிச்சயமாய் அறுத்தெறியப்படவேண்டியவைகள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் நீங்களும் உங்கள் அடிகளை பின்னோக்கி வைத்து திரும்பிச் செல்வது உத்தமம்.

நெருப்பாய் எரித்துப் போடும் சூழல்களை எனக்கு விதைத்துப் போட்ட ஏக இறையே.. உனக்கு கோடாணு கோடி நமஸ்காரங்கள்....நான் நெருப்போடு போராடி போராடி நெருப்பாய் நான் மாறிப்போன அதிசயம் நிகழ நீயே எனக்கு சூத்திரதாரியானாய்....

தகுதி உள்ளவை எல்லாம் தப்பிப் பிழைக்கும். இது உலக நியதி. அப்படியாய் தப்பிப் பிழைத்து வீறு கொண்டு ரெளத்ரத்தை புத்தியில் சுமந்து வாழ்க்கையை வெல்லும் தீரமான உக்கிரத்துக்குப் பின்னால் மென்மையான காதல் ஒன்று எப்போதும் ஒரு தாயைத் தேடும் குழந்தையாய் கை நீட்டிக் காத்திருக்கவும் செய்கிறது. 

காதலை கொடுக்கவும், காதலைப் பெறவும், அன்பில் நனையவும், அன்பாய் மாறவும், எதிர்பார்ப்பில்லாத உள்ளத்தை தொடும் ஒரு அரவணைப்பையும் நேசத்தையும், தாயாய் தலை கோதி நெஞ்சோடு சேர்த்து கொடுத்து  போரட்டங்கள் எல்லாம் ஒரு பெரும் நிம்மதிக்காத்தான், தேடல் எல்லாம் திருப்தியின் உச்சத்திற்குத்தான்.... 

கரடு முரடான வாழ்க்கையை ஒரு போராளியாய் கடந்து செல்வது எப்போதும் கரடு முரடாய் சுற்றித் திரிவதற்கு அல்ல...காதலில் நிறைந்து காதலாய் மாறி..........பிரமாண்டப் பிரபஞ்சத்தில்  முற்றிலுமாய் கரைந்து போக....என்று

இந்த ஆசை மறைமுகமாய் எப்போதும் துரத்த, எதிர்ப்படும் வாழ்க்கையின் இன்னல்களை துவம்சம் செய்து....நாம் நகரும் போதும் ஒரு ப்ரியமான காதல் எப்போதும் நம்மை துரத்தித் துரத்தி.......

' ஆசை ஆசை ஆசை மகதீரன் நீ தொட....
ஆசை தீர தோகை உனை நாளும் கொஞ்சிட
தினம் மாலை நேரம் காணும் தோற்றம் யாவும் நீயடா
இனி மேலும் மேந்து நின்ற வஞ்சி 
மாமன் தோளை சேர வேலி ஏது.....'

என்று கேள்வி கேட்கவும் செய்கிறது.....! 


கேட்குதா இல்லையான்னு நீங்க வேணா பாட்ட கேட்டுட்டு முடிவு பண்ணுங்களேன்..!


தேவா. S


Comments

ஹேமா said…
ஒரு பாடல் உங்கள் கைகளில் அகப்பட்டு இன்னும் அழகாகி வெளிவந்திருக்கிறது தேவா.அத்தனை ரசிப்பு.எனக்கும் பிடித்த பாடல்.இந்தப் படமும் அப்படித்தான்.நன்றி !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல