சென்சார் போர்டு அனுமதி கொடுத்த ஒரு திரைப்படத்தை கமல்ஹாசன் ஒரு தனிப்பட்ட பிரிவினருக்கு போட்டுக்காட்டி இருக்கத் தேவையில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழக அரசு முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கோடு இந்த விசயத்தில் மூக்கை நுழைத்து தங்களின் வாக்கு வங்கியை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றிருக்கும் ஒரு கேவல அரசியலும் விசுவரூபம் படத்தின் தற்காலிக தடையின் மூலம் அரங்கேறி இருக்கிறது.
ஜனநாயக வலிவு கொண்ட இந்த தேசத்தின் கட்டமைப்புகள் தனிமனிதர்களாலோ, அல்லது ஏதோ தனிப்பட்ட பிரிவுகளாலோ, மத, சாதீய அமைப்புகளாலோ அரசியல் ரீதியாக நிர்ப்பந்திக்கப்பட்டு தகர்த்தெறியப்படுமே ஆனால்.. அது இந்த தேசத்தின் உள் கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அத்தனை இந்திய பிரஜைகளுக்கும் விடப்பட்ட சவாலாகவே கருதப்படவேண்டும்.
விசுவரூபம் படத்தின் கதை இன்னது என்று முழுமையாக நாம் அறியாவிட்டாலும் ஓரளவிற்கு ஊகங்களின் அடிப்படையில் இப்படியாய் இந்த மக்களைப் பற்றி எடுத்திருக்கிறார் என்று நம்மால் அனுமானிக்க முடியும். ஆப்கானிஸ்தானத்தில் நடந்த தாலீபன்களின் ஆட்சியில் எல்லாம் சுகமாய் அந்த தேசத்தில் நடந்தேறிக் கொண்டிருந்தது என்று உறுதி சொல்ல இங்கே போராட்ட முழக்கமிடுபவர்களால் முடியுமா? அமெரிக்கா என்னும் ஏகாதிபத்திய அரக்கனின் நகர்வுகள் எவ்வளவு அழுத்தமாய் கண்டிக்கப்பட வேண்டியதோ அதே அளவில் மத ரீதியாய் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அதற்காய் மனித வாழ்க்கையை சீரழிக்கும் மிருகங்களையும் நாம் கண்டித்தே ஆகவேண்டும்.
இறைவனின் பெயரைக் கொண்டு கொலை செய்யும் கொடூரன்.... எந்த மதத்தின் அடையாளத்தை சூடிக் கொண்டிருந்தால் என்ன...? காழ்ப்புணர்ச்சிகள் இன்றி அது கண்டிக்கப்படத்தானே வேண்டும்..? அஜ்மல் கசாப்பும் அவனது குழுவினரும் மும்பையிலே வெறியாட்டம் நடத்திக் கொன்ற கதையை படமாக்க வேண்டுமெனில் அப்படிக் கொல்லும் போது அவர்கள் நடந்து கொண்ட விதத்தையும், யாரால், ஏன், எதன் பெயரால் இப்படி நடந்து கொண்டார்கள் என்றும் நாம் விளக்க முற்படுகையில் அங்கே தன்னிச்சையாய் அவர்கள் சார்ந்திருந்த மதம் குறுக்கே வந்து விழத்தானே செய்யும்...? தீவிரவாதிகளை, கொடுமைக்காரர்களை சாடுதல் என்பதை... எப்படி ஒரு ஒட்டு மொத்த பிரிவினரை சாடுதலாய் எடுத்துக் கொள்ளமுடியும்...?
எம்.ஜி.ஆர் காலத்துப் படங்களில் எல்லாம், காத்தவராயனும், கபாலியும் முரட்டு மனிதர்களாய் பெண்களை கற்பழிப்பதும், கள்ளக்கடத்தல் செய்வதும், கொலைகள் செய்வதும் என்று இருந்தார்களே..? இதை மதரீதியாய் எடுத்துக் கொண்டு ஒரு சமூகத்தினரின் பெயரையே ஏன் வில்லன்களுக்கு வைக்கிறீர்கள் என்று போராடினால் அது எவ்வளவு பெரிய அபத்தம்...?
என் சமூகத்தில் உலக சமுதாயமே ஆபத்தாய் கருதி பயந்து கொண்டிருக்கும் அணு உலையை திறக்க அரசுகள் முயன்ற போது... அடடா இங்கே மக்கள் போராட்டம் வெடித்து சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகுமே என்று பயப்படாத அரசு, தொடர்ச்சியாய் மின்சாரம் இல்லாமல் என் மக்கள் இருளில் மூழ்கிக் கிடந்து தொழில்கள் எல்லாம் நலிவடைந்து போகுமே, மக்களின் வாழ்க்கை சீரழிந்து போகுமே அதனால் மக்கள் விழித்தெழுந்து போராடினால் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகுமே என்று பயப்படாத அரசு...,
ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து போகும் என்ற பயந்து படத்தை 15 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருப்பதின் பின்னணியில் இருக்கும் பலமான அரசியலை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தேவர் மகன் என்னும் படத்தையும் கமலஹாசன் எடுத்தார், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை வன்முறைக்குச் சொந்தக்காரர்களாக அந்த திரைப்படம் சித்தரித்து, க்ளைமாக்ஸில் அவர்களை எல்லாம் திருந்தி வாழச் சொல்லும், பிள்ளைகளை எல்லாம் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி படிக்கச் சொல்லும்...இப்படியாய் சொன்னதாலேயே அது குறிப்பிட்ட சமூகத்தினரை குறை சொன்ன படமாய் ஆகி விடுமா..?
இந்த உலகம் பார்க்காத ஒன்றைப்ப்பற்றி திரித்துக் கூறி கமலஹாசன் படம் எடுத்து விட்டாரா என்ன..? அகில உலகில் நடந்த ஒரு நிகழ்வு அதன் மையம் என்ன என்று யோசித்து சினிமா எடுக்கும் போது அந்த மண் சார்ந்த மனிதர்களின், உடை, மொழி, மதம் எல்லாமே சேர்ந்துதான் அந்த சினிமாவை முழுமைப் படுத்த முடியும்..! அது என்ன கருமமோ தெரியவில்லை கமலஹாசன் சண்டியர் என்று பெயர் வைத்தாலும் இந்த சமூகத்துக்கு பொத்துக் கொண்டு வந்து வன்முறையைத் தூண்டுகிறார் என்று வழக்கு போடுகிறது....., சரி தொலைகிறது என்று சரியான பெயர் வைத்து முறையாய் படம் எடுத்து தணிக்கை சான்றிதழ் வாங்கினாலும் அதுவும், பிரச்சினையாய் இருக்கிறது...
பாவம் கமலஹாசன்...!
சைவ மரபில் வந்த ஒரு மன்னன், வைஷ்ணவனை கல்லில் கட்டி கடலில் தூக்கிப் போட்ட போது இப்போது போராடும் சமூகம் கை தட்டி சிரித்துப் பார்த்து மகிழ்ந்தது...அப்போது அந்த உண்மையை எதிர் கொள்ள முடியாத சைவத்தை சார்ந்த மக்களுக்கு கமலஹாசன் எதிரியாகிப் போனார்..... பிரச்சினை கமலஹாசனிடமா இல்லை உண்மையை எதிர் கொள்ள திரணியற்ற ஒரு புரையோடிப்போன சமூகத்திடமா என்பதற்கு காலம் மட்டுமே விடையளிக்க முடியும்...!
விசுவரூபம் போன்ற திரைப்படங்களை தடை செய்து விடுவதன் மூலம் மட்டுமே சமூகத்தின் கண்களிலிருந்து எல்லாவற்றையும் மறைத்து விட முடியாது. எல்லா மதங்களிலுமே அயோக்கியர்கள் இருக்கிறார்கள்...மதம் என்பது வாழ்க்கையை சரியாய் வாழ சொல்லிக் கொடுக்கப்பட்ட வழிமுறை என்பதை உணரவே இல்லை. தங்களின் மதமே மற்றவர்களின் மதத்தோடு உயர்ந்தது என்ற குறுகிய மனப்பான்மையோடு என் கடவுளே உன் கடவுளை விட உயர்ந்தவர்... என்னும் மனநோய் பிடித்து மிருகமாய் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்...
படைப்பாளிகள் கட்டுக்களின்றி சிறகு விரித்து பறந்து இந்த சமூகத்தில் நிகழ்ந்தேறி இருக்கும், நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களின் தாக்கத்தில் தங்களின் ஆக்கங்களைத் தொடர்ச்சியாய் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். கமலஹாசனும் அப்படியே....! அவன் ஒரு கட்டுக்கள் உடைத்த காட்டு மிருகம். மதத்தை தனது காலடியில் போட்டு மிதித்த மதம் பிடித்த யானை அவன். எந்த ஒரு இனமாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் திக்குகள் தோறும் பரவித் திரியும் பெரும் தீ அவன்....
இங்கே அரசியல் செய்து, மதத்தின் பெயரால் இது சரி, அது தவறு என்று சொல்பவர்களை எல்லாம் கடந்து நிற்கும் விசுவரூபத்திற்கு அவன் சொந்தக்காரன். தடைகளை உடைப்பான்....தனக்கென ஒரு முத்திரையைப் பதிப்பான்...என்பது எல்லாமொரு பக்கம் இருந்தாலும்....
இந்தப்படத்தை ஏன் வெளியிடச் சொன்னோம் என்று சென்சார் போர்டும்.... அதை ஏன் தடை செய்தோம்? என்று தமிழக அரசும்...முதலில் விளக் கம் கொடுக்க வேண்டும். சென்சார் போர்டு தவறெனில் அதை முதலில் தடை செய்யுங்கள்.... இல்லை அரசின் முடிவு தவறெனில் எதிர்வரும் காலங்களில் சென்சார் போர்டு அனுமதித்தப் பின்னால் எந்தக் கொம்பனும் தடை செய்ய முடியாது...சட்ட ரீதியாய்த்தான் அதை அணுகவேண்டும் என்று உறுதியான சட்டம் இயற்றுங்கள்....!!
இல்லையெனில்...
எதிர்காலத்தில் தமிழகத்தில் எந்த ஒரு திரைப்படத்தையுமே எடுத்து வெளியிட முடியாமல்...நாமெல்லாம் டாம் & ஜெர்ரியையும், மிக்கி மெளசையும் ஹார்லிக்ஸ் குடித்துக் கொண்டே பார்த்து ரசிக்க மட்டுமே முடியும்....!!
இல்லையெனில்...
எதிர்காலத்தில் தமிழகத்தில் எந்த ஒரு திரைப்படத்தையுமே எடுத்து வெளியிட முடியாமல்...நாமெல்லாம் டாம் & ஜெர்ரியையும், மிக்கி மெளசையும் ஹார்லிக்ஸ் குடித்துக் கொண்டே பார்த்து ரசிக்க மட்டுமே முடியும்....!!
தேவா. S
Tweet | |||||