Skip to main content

ஏரிக்கரை பூங்காற்றே....!


வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் நிறைந்து கிடக்கும் உணர்வொன்றை மொத்தமாய்  என்னுள் திணித்துப் போட்டிருக்க்கும் உனது பேரன்பினை விவரிக்க இயலாமல் ஒரு குருடனாய் தட்டுத் தடுமாறி உனக்கான வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எத்தனை முறை இயம்பினாலும் தீராத காதலொன்றை என் வார்த்தைகளுக்குள் கொண்டு வரும் பிராயத்தனத்தை நான் வலி என்பதா சுகம் என்பதா இல்லை இரண்டும்  பிசைந்தெடுத்த கலவை என்பதா?

அடர் இரவொன்றின் நீண்ட பயணத்தில் துணைக்கு வரும் நிலவாய் என்னை துரத்தும் உன் நினைவுகளை மென்று கொண்டே என் ஜன்னலோரப் பேருந்தில் நகர்ந்து கொண்டிருக்கும் சொர்க்க நிமிடங்களின் ஏக்கத்தை காதலென்று அடையாளப்படுத்தியபடியே தூரத்தில் சிறகடிக்கும் ஒற்றை பறவை ஒன்று தன் துணையத் தேடி சென்று கொண்டிருக்கலாம்....ஆழமான பேரமைதியை உள்வாங்கிக் கொண்டு ஏதேனும் ஒரு மரக்கிளையில் அதன் துணை காத்துக் கொண்டுமிருக்கலாம்..

இறக்க முடியாத சிலுவையினை சுமக்கும் தேவனாய் உன்னை மறக்க முடியாமால் நகரும் என் பொழுதுகளை எல்லாம் நீயே விடியவைக்கிறாய்...நீயே அணைத்தும் வைக்கிறாய்.  எடுத்தியம்ப இயலாத உணர்வுகளைத்தான் எப்போதும் போல இப்போதும் எழுதி வைக்கிறேன்....! 

ப்ரியங்கள் எப்போதும் சொல்லிக் கொள்வதில் முடிந்து விடுவதில்லை. நேசங்கள் ஒரு போதும் மேடையேறி தன்னை கோடி பேருக்கு அது அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. எதையும் பகிரவேண்டிய அவசியமற்று மெளனமாய் சுற்றும் இந்த பூமியையும், தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் சூரியனையும் இருக்கிற்தென்று சொல்லி நியாயங்கள் பேச வேண்டியதும் இல்லை. 

காதலென்ற ஒற்றை சொல்லுக்குள் 
அடைபட முடியாமல் துடிக்கும்
என் உணர்வுகளை பிரம்மாண்டமாய்
விரித்துப் போட்டிருக்கிறேன்
இந்த பிரபஞ்சப் பெருவெளியெங்கும்
திறந்து கிடக்கும் வானத்தின்
நட்சத்திரங்களாய் கண்சிமிட்டும்
உன் மீதான என் காதலுக்கு
மறுமொழி பகிராவிடினும்
இமைகள் சிமிட்டி விழிகளாலாவது
நீ சிரித்து விட்டுப் போ....!!


இப்படியாய் கிறுக்கிக் கொண்டே பின்னணியில்  இசைத்துக் கொண்டிருக்கும் இளையரஜாவின் இசைக்குள் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருக்கிறேன். இந்த பாடலுக்காக நான் ஏதோ எழுதினேன் என்று சொல்ல முடியாது ஆனால் பாடல் கொடுத்த உணர்வுகள் எங்கோ இழுத்துச் சென்று என்னை நிறுத்தியதால் எழுதினேன் என்பது உண்மை. அட்டகாசமான ஒரு சூழலை எடுத்துச் சொல்லும் இது போன்ற பாடலின் சூழல்கள் எல்லாம் கவிதைத்தனமானது. தன்னுடைய துணையை நினைத்து படத்தின் ஹீரோ பாக்கியராஜ் சோகமாய் பாடிக் கொண்டிருக்கையில் நம்பியார் அப்படியே ப்ளாஸ் பேக்கில் தன்னுடைய காதலியோடு டூயட்  பாடுவார். ஒரே பாடலை சோகமாகவும் டூயட்டாகவும் உணர வைக்கும் வித்தையை செய்திருப்பார் ராஜா சார்.

முழுக்க முழுக்க ஏக்கத்தையும் காதலையும் பிசைந்து உருவாக்கப்பட்டிருக்கும் பாடலை சிதம்பரநாதன் என்று ஒருவர் எழுதி இருக்கிறார்.

" ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு "

வலியை ஏந்தி வரும் பாடலோடு  கரைந்து போக வாழ்த்துகள்...!





தேவா சுப்பையா...



Photo Courtesy: யோ

Comments

அருமையான பதிவு அண்ணா...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

//அடர் இரவொன்றின் நீண்ட பயணத்தில் துணைக்கு வரும் நிலவாய் என்னை துரத்தும் உன் நினைவுகளை மென்று கொண்டே என் ஜன்னலோரப் பேருந்தில் நகர்ந்து கொண்டிருக்கும் சொர்க்க நிமிடங்களின் ஏக்கத்தை காதலென்று அடையாளப்படுத்தியபடியே தூரத்தில் சிறகடிக்கும் ஒற்றை பறவை ஒன்று தன் துணையத் தேடி சென்று கொண்டிருக்கலாம்....//

யே யப்பா ... முழுசா நிமிஷம் ஆகிடுச்சு ஏக தம்முள புரிஞ்சு படிக்க ...! எவ்ளோ நீளமான வரிகள் ...! சாவடிக்குறீங்கண்ணா ..கிளாசிக் ...!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல