Skip to main content

மரத்தடி...!


கவிதை எழுதலாமா?  காஃபி குடிக்கலாமா? எதுவும் செய்யாமல் வெறுமனே பால்கனிக்குப் போய் வேடிக்கை பார்க்கலாமா? இல்லை ஏதேனும் புத்தகத்தின் இரண்டு மூன்று பக்கங்களைப் புரட்டிவிட்டு அதன் தாக்கத்தில் எங்கோ போய் விழுந்து புரண்டு கொண்டிருக்கலாமா? பிரியமான இசையைக் கேட்கலாம் கூடத்தான்.  தமிழின் ஆகச்சிறந்த படங்களின் தொகுப்பினை சேமித்து வைத்திருக்கும் போல்டர் கூட புஷ்டியாகிவிட்டது. பற்றாக்குறைக்கு நண்பர்கள் குறிப்பிட்டுச் சொல்லி பார்க்க சொன்ன உலகத் திரைப்படங்கள் வேறு கூடிக் கொண்டே போகிறது. யூ ட்யூபில் பார்த்து பார்த்து தொகுத்து வைத்திருக்கும் பாடல்களை, இன்னபிற காணொளிகளையும் கேட்டு முடிக்க தொடர்ச்சியாய் ஒருவாரம் கூட ஆகலாம்.

யூ ட்யூப் தொகுப்பில் இன்னதுதான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ராஜா சார், ரகுமான், எம்.எஸ்.வி, தியாகராஜ பாகவதர் என்று தொடங்கி கெனி ஜியின் சாக்ஸ்போன்,  பெஸ்ட் ஆஃப் மொசார்ட், பண்டிட் ஹரிபிரசாத் செளரஷ்யாவின் புல்லாங்குழல், யார் யாரோ வெறுமனே பாடி தொகுத்து வைத்திருக்கும் கர்நாடக சங்கீதத் தொகுப்பு, இஷா அமைப்பினரால் கம்போஸ் செய்யப்பட்ட பாடல்கள், சைவ சித்தாந்தம் பற்றிய தொகுப்புகள், உலகின் புகழ்பெற்ற மேடைப் பேச்சுக்கள்,   இதைக் கேளுங்கள் நன்றாயிருக்கும் என்று கூறி அவ்வப்போது நண்பர்கள் கொடுத்த இணைப்புகள், குன்னக்குடி வைத்தியநாதன், மதுரை சோமு என்று எப்போது எது பிடிக்குமோ அதை தொகுத்து வைத்துக்கொண்டு பொறுமையாய் பிறகு மாடு அசை போடுவது போல ஒவ்வொன்றாய் கேட்பதும் எனக்குப்பிடிக்கும். ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியாய் கேட்க விடாமல் வேறு ஏதாவது ஒரு இடையூறு வந்துவிடுவதால் இதுவரையில் முழுமையாய் அவற்றையும் கேட்டு முடிக்க முடியவில்லை. 

ஏதோ ஒன்றை செய்யலாம். இல்லை எதுவும் செய்யாமல் சிவனே என்று உட்கார்ந்திருக்கலாம். சுற்றி ஓராயிரம்  விசயங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. எதைப் பற்றியும் யோசிக்காமல் இருப்பதே நலம். இந்த உலகத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தி விவாதம் செய்ய வைக்காத எதையும் நான் செய்யத் தயார்தான். இப்படி இருப்பதாலேயே நண்பர்களோடு கூட பேசுவதற்கு எனக்கு ஒன்றுமே இருப்பதில்லை. வெகு நேரம் பால்கனியில் அமர்ந்து அதிகாலை வானத்தின் நீல நிறத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த செய்தியும் என்னிடம் இல்லை என்று வானமும் என்னைப் [போலவே மெளனமாய் இருந்தது. தூரத்தில் ஒரு குட்டி மேகம் நடைபயிலும் குழந்தையைப் போல தத்தித் தத்தி மிதந்து கொண்டிருந்தது. என்ன இருக்கும் இந்த வானத்தின் முடிவினில்? எங்கே செல்லும் இந்த அகண்டவெளி என்று நான் சிறுவயது முதலே யோசித்துக் கொண்டிருக்கிறேன். பதில் ஒன்றும் கிடைக்காதுதான் ஆனால் யோசிப்பது சுகமாய் இருக்கிறது எனக்கு. விடுமுறை நாளில் அதிகாலையில் வேலை ஏதும் இல்லாமல் என்னைப் போல எழுந்து கொள்ளும் பைத்தியக்காரர்கள் வேறு யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே நடக்கலாம் என்று கீழே இறங்கினேன்.

இரவின் வாசனையோடு மெலிதாய் விடிந்து கொண்டிருந்தது பொழுது. முழு இரவும், முழுப் பகலும் ஒருவிதமானது என்றால், விடிந்தும் விடியாத அதிகாலையும், மெல்ல இருட்டத் தொடங்கும் அந்திப் பொழுதும் வேறு விதமானது. வசீகரமான அந்தக் கலவை எனக்குப் பிடிக்கும். ஒரு ஓவியன் வர்ணங்களை குழப்பி புது நிறத்தை பெற முனைவது போல இருக்கும் இரவின்நுனியும் பகலின் முடிவும். வேலை நாட்களில் மனிதர்களோடு பேசி, ஓடி, ஆடி, கோபப்பட்டு, சிரித்து, நடித்து, ஏமாந்து, ஏமாற்றி, மிகப்பெரிய நாடகத்துக்குப் பிறகு அசுரத்தனமாய் மாலைப் பொழுதை கடந்து வரவேண்டி இருக்கும். ரசிக்க அப்போது ஒன்றுமே இருக்காது. இப்போது எல்லாம் வாரத்தில் ஒரு நாளாவது ஓய்வாய் இருந்துவிட மாட்டோமா என்று ஏங்கியபடியேதான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஓய்வு என்பது விடுமுறை என்று என்னால் எடுத்துக் கொள்ள முடியாது.  ஓய்வு என்பது இடையூறு இல்லாமல் பிடித்த விசயத்தில் லயித்துக் கிடப்பது. 

யோசித்துக் கொண்டே மெல்ல நடந்து கொண்டிருந்தேன். ஆள் அரவமற்ற தெருக்களுக்குள் அதிகாலையிலேயே எழுந்து கொண்ட பட்சிகள் உணவு தேட வெளியே பறப்பதற்கு முன்பாக மரங்களிலமர்ந்து காச் மூச் என்று கத்திக் கொண்டிருந்தன. அவை மகிழ்ச்சியாக  ஒன்றை ஒன்று கொஞ்சிக் கொண்டிருக்கலாம், அதிகாலையிலேயே பசி எடுத்த குஞ்சுகள் அம்மா பறவையையோ அல்லது அப்பா பறவையையோ பார்த்து பசியில் விய்யா.. விய்யா என்று கத்திக் கொண்டிருக்கலாம். குஞ்சுப் பறவையைத் தன் சிறகால் அணைத்து இதோ உணவோடு வந்துவிடுகிறேன் என்று தாய்ப்பறவை அலகால் முத்தமிட்டுக் கொண்டிருக்கலாம், காதல் பறவைகள் உரசிக் கொண்டு உலக மொழிகளில் இதுவரையில் எழுதப்படாத கவிதைகளைப் பரிமாறிக் கொண்டிருக்கலாம், வலியால் சிலதும், கோபத்தில் சிலதும் கத்திக் கொண்டிருக்கலாம்....

வழி நெடுக மரம். மரம் முழுதும் பறவைகள். ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு வாழ்க்கை. ஒவ்வொரு விடியல். ஒவ்வொரு பிழைப்புப் போராட்டம். நடந்து கொண்டே வெகுதூரம் வந்து விட்டேன். ஒரு மரத்தின் தடித்த வேரின் மீது போய் அமர்ந்தேன். மரத்தின் மீது வாட்டமாய் சாய்ந்து கொண்டேன். பச்சையாய் ஈரத்தோடு இருந்த மரத்தின் பட்டைகள் செதில் செதிலாய் வெடித்துக் கோடுகள் ஆழமாய் இருந்தன. பழைய மரம் போல இருக்கிறது. எனக்கு என் அப்பத்தாவின் நியாபகம் சட்டென்று வந்தது. நகரத்தின் மரங்களும், கிராமத்தின் மரங்களும் ஒரே செய்தியைத்தான் ஒரே உணர்வைத்தான் தருகின்றன. மரங்கள் என்ன மனிதர்களா? இடத்திற்கு இடம், சூழலுக்குச் சூழல் தன்னைத் தானே மாற்றிக் கொண்டு, ஏமாற்றி வாழ்ந்து செல்ல.

எங்கு நட்டாலும் மரம் மரம்தான். கார்பன் மோனாக்சைடை உமிழ்ந்து காற்றை மாசுபடுத்த ஆயிரம் வாகனங்களை மனிதன் கண்டுபிடித்து அதை அறிவியல் சாதனை என்று மார்தட்டிக் கொள்வதைப் போல மரங்கள் மார்தட்டிக் கொள்வதில்லை. அவை போதும் போதும் என்னுமளவிற்கு அவற்றின் கடைசிக் காலம் வரை மனிதர்கள் சுவாசிக்க ஆக்ஸிஜனை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. மனிதர்களுக்குத்தான் கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இருப்பது கிடையாது. இயற்கையின் பிச்சையில் வாழ்ந்து கொண்டு எல்லாம் இவனே செய்தது போல இறுமாந்து கொள்கிறான். பாவம் மரங்களும் இன்ன பிற தாவரங்களும். அவை ஒரு மனிதனை உருவாக்கி, சுமந்து, பின் அவன் மரணிக்கும் வரை அவனோடே பயணிக்கின்றன. பின்னொரு நாள் ஏதோ ஒரு மரம் விறகாகி பின் அது உயிரற்ற மனிதனின் உடலோடு பஸ்பமாகி தன் வாழ்க்கையின் இறுதியை எட்டிப் பிடித்து வேறு வடிவம் எடுத்துக் கொள்கிறது. மரங்கள் எரியும் போது மரங்கள் அழுவதில்லை ஏனென்றால் அவை வாழ்வில் ஊறிக் கிடப்பவை. இருப்பதும் இல்லாததும் பெரியவிசயம் இல்லை அவற்றுக்கு மனிதர்களைப் போல.

நான் நீண்ட பெருமூச்சோடு மரத்தின் வேர்களுக்குள் கிடந்தேன். விடியற்காலையில் இப்படி மரத்தின் மடியில் ஓய்ந்து கிடப்பது சுகமாயிருந்தது. குருக்கத்தியில் நான் என் வீட்டுப் பின்புறத்து தோட்டத்தில் இருக்கும்  பருத்த புளிய மரத்து வேர்களுக்கு இடையே இப்படி கிடப்பதுண்டு என்பதை இங்கே தட்டச்சு செய்து முடிக்கும் போதுதான் குருக்கத்தி பற்றி தெரியாதவர்களுக்கு என்னவென்று தெரியும் குருக்கத்தி பற்றி என்று யோசிக்கிறேன்.  தொடர்ச்சியாய் என்னை வாசிப்பவர்களுக்கு குருக்கத்தியையும் என்னையும் பிரித்துப் வைத்து பார்க்கக் தெரியாது. குருக்கத்தி என் பூர்வீக குக்கிராமம். நகரத்தில் மூச்சு திணற பிழைத்துக் கொண்டிருக்கும் இந்த கிராமத்தானின் மூதாதையர்கள் மண்ணோடு  கட்டிப் புரண்ட இடம். கொத்திக் கொண்டும், உழுது கொண்டும், விதைத்துக் கொண்டும் கண்மாய்க் கரையோரம் படுத்துறங்கி வற்றி போன கண்மாய் தூர்ந்து போவதற்கு முன்னாலாவது வா மழையே.... என்று ஏக்கமாய் வானம் பார்த்த மனிதர்கள் அவர்கள். செம்மண் சரளையும், கருவேல மரங்களும் இப்போதும் என்னிடம் ஊருக்குச் சென்றால் நிறைய பேசுவதுண்டு. நிறைய வலிகளையும் அந்த வலிகளோடு வாழ்க்கையை கொண்டாடிய மனிதர்களையும் பற்றி அதிகம் புரிந்து வைத்திருப்பவை அவைதான். மழை பெய்தாலும் அவற்றுக்குத் தெரியும், மனிதன் மரித்தாலும் அவற்றுக்குத் தெரியும்.

என் உடலுக்குச் சொந்தமான பூமி அது. அங்கேதான் இந்த உடல் காற்றாயிருந்தது, மண்ணில் தாது சத்துக்களாய் கிடந்தது. விதையாயிருந்தது. பழமாயிருந்தது, காய்கறிகளாயும் இழை, தழையாயும் இருந்தது. அங்கிருந்துதான் இந்த உடல் கிடைத்தது. சொந்த ஊர் என்பது வெறுமனே முன்னோர்கள் வாழ்ந்து மரித்த இடம் மட்டுமல்ல. அது இந்த உடலாய் ஆவதற்கு முன்பு  பல்வேறு சத்துப் பொருட்களாயும் இந்த சதைக் கோளம் பரவிக்கிடந்த இடம். எந்த பாட்டன் வைத்த மரம் என்று யாரும் சொன்னதில்லை ஆனால் எல்லோரும் என் வீட்டு பின்னாலிருக்கும் அந்த மரத்தடியில் விளையாடி இருக்கிறார்கள். இன்னமும் போதும் போதுமென்னும் அளவிற்கு காய்த்துக் கொடுக்கிறது அந்த புளியமரம்.

முன்பெல்லாம் ஏதோ ஒரு புத்தகத்தோடு அந்தமரத்தின் வேர்களுக்குள் நான் ஒடுங்கிக் கிடப்பேன்.  மிக பாதுகாப்பான ஒரு கதகதப்பான இடமாய் அது இருக்கும். தாயின் கருவறையில் மிதந்து கிடக்கும் சிசுவாய் அங்கே நான் எண்ணமற்ற வெளியில் மிதந்து கிடந்திருக்கிறேன். மரத்தின் வேர்களுக்குள் போய் அமர்ந்த அடுத்த நொடியில் மனம் நின்று போகும். மரம் இருக்கும். மரம் மட்டுமே இருக்கும். மீண்டெழுந்து நான் பல நாட்கள் உடல் புகுந்திருக்கிறேன். பட்டை பட்டையாய் இருக்கும் அந்த மரத்தினூடே எறும்புகள் ஊர்ந்து கொண்டிருக்கும், சிறு பூச்சிகள், மரம் முழுதும் பறவைகள், என்று மிகப்பெரிய சம்சாரி அந்த மரம். பெரிய கை. என் வீட்டுக் கொல்லையில் நின்று கொண்டு பலரின் மரணத்தை அறிந்து வைத்திருப்பவள். பல திருமணங்களை பார்த்து ரசித்திருப்பவள். சண்டைகளையும் சச்சரவுகளையும் பார்த்து பார்த்து புரிந்து வைத்திருக்கும் அனுபவஸ்தி.

ஏப்ப்ப்பத்தா......என்ன செஞ்சுகிட்டு இருக்க நீய்யி.....என்று கேட்டுக் கொண்டேதான் அவளருகே செல்வேன். கை வைத்து மரத்தை தடவி, கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்சம் மரத்தை விரலால் சுரண்டி, அதன் பச்சைத் தன்மையை விரலுக்குள் வாங்கி முகர்ந்து, புளிக்கும் காயையும், இனிக்கும் பழத்தையும் எடுத்து ஆவலாய் கடித்து தாயின் முலை பற்றி இழுத்து பாலருந்தும் குழந்தையாய் நான் உண்டிருக்கிறேன். அது வெறுமனே பார்ப்பவர்க்கு  ஒரு மரம். அதை வெறுமனே பார்த்தபடி ஆயிரமாயிரம் எண்ண ஓட்டத்தோடு எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கலாம். அந்த மரம் மட்டுமல்ல இந்த உலகிலிருக்கும் எந்த மரமும் ஒரு மரம் மட்டுமல்ல. அங்கே அதைச் சுற்றி ஒரு வாழ்க்கை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இளைப்பாற எத்தனையோ ஜீவன்கள் அதன் நிழலிலும் அதன் மீதிலும் வந்து அமர்ந்து கொண்டே இருக்கின்றன.

எவ்வளவு நேரம் ஆனது என்று யோசிக்காமல் என் நகரத்து விடுமுறை தினத்தின் காலையில் அந்த மரத்தின் மடியில் கால் நீட்டி சாய்ந்தமர்ந்திருந்தேன். புத்தகம் படிப்பதைக் காட்டிலும், இசையைக் கேட்பதைக் காட்டிலும், தத்துவம் பேசுவதைக் காட்டிலும், கடவுள் தேடுகிறேன் என்று மமதை மொழியை மனதோடு பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும்....... மொழியற்ற இயற்கைக்குள் விழுந்து கிடப்பதே பெரு ஓய்வு என்று எனக்குத் தோன்றியது.

இனி ஓய்வென்று கான்கிரீட் சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு ஏதேதோ செய்வதைக் காட்டிலும், ஞானம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஏதோ ஒரு மரத்தடியில் விழுந்து கிடப்போம் என்று யோசித்தபடியே....

எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.  மரங்கள் எல்லாம் மெளனமாயிருந்தன.


தேவா சுப்பையா...






Comments

மரத்தடி...

கண்மாய்க்கரையில் வேப்பமரத்தடி...
அம்மன் கோவிலுக்குப் பின்னே வேப்பமரத்தடியில் அருவாள் தீட்டி வழுவழுப்பாய் இருக்கும் வேரில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிய நாட்கள்...

என எல்லாவற்றையும் மனசுக்குள் மீண்டும் தென்றலாய் பரவிச் சென்றது...
அருமை... அருமை அண்ணா.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல