Skip to main content

கோதை...!


வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே...

என்று சடாரென்று சொன்னாளாம் கோதை. கேட்ட விஷ்ணு சித்தருக்கு தலை சுற்றியே போய்விட்டதாம், பெருமாளைப் போய் எப்படியம்மா என்று கலங்கி நின்ற பொழுதியில் கோதை உறுதியாய் சொல்லி விட்டாளாம். நான் மணமுடித்தேன் என்றால் அது அந்த அரங்கனைத்தான் மணமுடித்தேன் என்று அவள் சொன்ன போது அரங்கனே விஷ்ணு சித்தரின் கனவில் வந்து கோதை சூடி பார்த்த மாலைதான் வேண்டும் என்று கேட்டதும் அவரின் நினைவுக்கு வந்ததாம். 

ரங்கநாதன் மீது கொண்ட காதலின் காரணமாய் கோதை  என்னும் ஆண்டாள் எழுதித் தீர்த்த பாசுரங்களில் செந்தமிழ் மீதேறி காதலும் பக்தியும் விளையாடும் பேரனுபவத்தை வாசிக்கும் போது நம்மாலும் உணர முடியும். ஆண்டாளை அரங்கனே ஆட்கொண்டு மணமுடித்தான் என்று ஆண்டாளின் கதையை மனதிற்குள் அசை போட்டபடி அமர்ந்திரந்தேன். இன்னும் சரியாய் ஒன்றரை மணி நேரம் இருந்தது எனது அதிகாலை மூன்றரை மணி விமானத்திற்கு....

தூக்கத்தோடு எல்லோரும் விழிப்பாய் இருந்த அந்த நேரத்தில் நான் கண் மூடி ஆண்டாளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு பிரேமை இந்த ஆண்டாளுக்கு கண்ணன் மீது அவளின் காதலை உடல் சார்ந்தே மிகையாய் அவள் வெளிப்படித்தியிருக்கும் அழகில் கொஞ்சமும் மிகாத இளம் பெண்ணிற்குரிய தேவையும் தேடலும் சேர்ந்தேதானே இருந்திருக்கிறது. வெறும் பக்தி என்று விபூதியும் குங்குமமும் பூசிக் கொண்டு ஊரை ஏமாற்றவில்லை கோதை என்னும் அந்த ஆண்டாள். அவள் காதலை தன் பருவத்திற்கேற்ற மனோநிலையில் எவ்வளவு அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறாள். சுத்த பிரேமையில் இருந்திருப்பாள் போலும் என்று ஆண்டாளாய் மாறி அந்த பிரேம நிலையிலிருந்து பார்த்தால் இந்த உலக நியதிகள் எல்லாம் எவ்வளவு மட்டுப்பட்டதாய் தோன்றும் என்று யோசித்துப் பார்த்தேன்....

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்த பஞ்சசயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா...."

என்றெல்லாம் எழுதி கிறங்கி கிடந்த பெண் எப்படி சராசரியான மானுட வாழ்வில் தன்னை இணைத்துக் கொள்ள முடியும்? முக்தியைத் தேடிய மனதின் பிம்பவடிவம் கண்ணன், பிரபஞ்சத்தில் இல்லாத  தன்மையோடு புணர்ந்து அழிக்க நினைத்த பெருங்காதலி ஆண்டாள் என்று யோசித்தபடி நானிருந்த இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டேன். பாக்கெட்டில் பாஸ்போர்ட் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்த போது மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்று காதுக்குள் ஆண்டாளே பாடுவது போல எனக்குத் தோன்றியது....

சென்னை விமானநிலையத்தின் கூரைகள்தான் அடிக்கடி பெயர்ந்து விழுந்து விடுகின்றன ஆனால் சென்ட்ரலைஸ்டு ஏர்கண்டிஷன் எல்லாம் தரமானதாய்தான் இருக்கிறது.... மார்கழி குளிர் போலவே அவ்வளவு குளிர். நான் டீ சர்ட்டை இறக்கி விட்டு கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு கண்கள் மூடி தூங்கும் தூங்காமலும் எனது விமானத்தின் அழைப்பிற்காக காத்திருந்தேன் ஆண்டாளின் நினைவோடு...

எக்ஸ் க்யூஸ்மீ ப்ளீஸ் என்று அழைத்த பெண் குரலைக் கேட்டு ஒரு வேளை ஆண்டாளாயிருக்குமோ என்று எனக்குள்ளிருந்த ஆண்டாளின் பிரேமை சுவாரஸ்யப்படுத்த மெல்ல கண் விழித்துப் பார்த்தேன்...

பக்கத்து இருக்கையிலிருந்த பெண்... ட்யூ ஹேவ் எ லைட்டர் ப்ளீஸ் என்று கேட்டாள்...

நோ என்று நான் சொல்வதற்கு முன் என் பக்கத்து இருக்கையிலிருந்தவன் லைட்டரை எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டவள்... டூ யூ ஸ்மோக் என்று மறுபடி கொஸ்டினாள்..., எப்போதாவது புகைக்கும் பழக்கம் கொண்ட எனக்கு அப்போது புகைக்க வேண்டும் என்று தோன்றியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று குளிர் இன்னொன்று அப்போதைய மனோநிலை...

பரஸ்பரம் எங்கு செல்கிறோம் என்று தகவல்களை பார்மாலிட்டியபடி இருவரும் புகைக்க ஆரம்பித்தோம். தமிழ் மீது பற்று அதிகம் என்று சொன்னபடி தன் கையிலிருந்த  ஏதோ ஒரு கவிதைத் தொகுப்பினை என்னிடம்  கொடுத்தாள் அவள்...

வாங்கி புரட்டிக் கொண்டிருந்த எனக்குள்....

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்...

என்று ஆண்டாள் பாடியது மட்டுமே கேட்டது.... எதிரில் புகைத்துக் கொண்டிருந்தவளை பற்றிய யாதொரு யோசனைகளுமற்று....கண்களை மூடி சாய்ந்து சரிந்தேன்.

ஆண்டாள்களும் அவ்வப்போது வந்து போவர்கள் போலும் இந்த பூமிக்கு....!




தேவா சுப்பையா...










Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல